உளுந்தூர்பேட்டை அருகே ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து; 12 பேர் படுகாயம்
உளுந்தூர்பேட்டை அருகே ஆம்னி பஸ் கவிழிந்து விபத்துக்குள்ளானது. இதில் 12 பேர் படுகாயமடைந்தனர்.;
உளுந்தூர்பேட்டை,
கன்னியாகுமரி மாவட்டம் களியாகாவிளையில் இருந்து சென்னை நோக்கி நேற்று முன்தினம் இரவு தனியார் ஆம்னிபஸ் ஒன்று புறப்பட்டது. பஸ்சை நெல்லை மாவட்டம் ராதாபுரத்தை சேர்ந்த முருகன்(வயது 30) என்பவர் ஓட்டி வந்தார். இதில் 41 பேர் பயணம் செய்தனர். இந்த பஸ் நேற்று காலை விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பாலி என்கிற இடத்தில் வேகமாக வந்து கொண்டு இருந்தது. இந்த நிலையில் பாலியில் புதிதாக மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருவதால், அங்கு போலீசார் சாலையில் தடுப்புகளை வைத்து இருந்தனர்.
இதனால் அந்த பகுதியில் ஆம்னி பஸ் டிரைவர் முருகன் பிரேக் பிடித்து மெதுவாக சென்றார். இந்த நிலையில் இந்த பஸ்சுக்கு பின்னால் உடன்குடியில் இருந்து வேகமாக வந்த மற்றொரு பஸ் திடீரென, அந்த பஸ்சின் மீது மோதியது. மோதிய வேகத்தில் முன்னால் சென்ற ஆம்னி பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அங்கு புதிதாக கட்டுப்பட்டு வரும் மேம்பாலத்தின் சுவரின் மீது மோதி, கவிழ்ந்தது. இதில் டிரைவர் முருகன் மற்றும் பஸ்சில் பயணம் செய்த மதுரையை சேர்ந்த மகாராஜா மகள் ஜியா(3), திருநெல்வேலி ஏ காலனியை சேர்ந்த சாலி(29), கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம் செந்தில் அரி(32), சென்னை வெங்கடேஷ், அவரது மனைவி ராணி, அழகுவேலன், அவரது மனைவி இந்துமதி உள்பட 12 பேர் படுகாயமடைந்தனர். இவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதற்கிடையே விபத்தை ஏற்படுத்திய மற்றொரு ஆம்னி பஸ் சாலையோர பள்ளத்தில் இறங்கிய நிலையில் நின்றது. இதனால் அதில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் காயமின்றி உயிர்தப்பினார்கள்.
இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த எடைக்கல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அகிலன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தி, அந்த பகுதியில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.