அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர்கள் சங்க தேர்தலை 27-ந் தேதி நடத்தக்கூடாது, தாசில்தார் அமுதா உத்தரவு
அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர்கள் சங்க தேர்தல் தொடர்பாக தாலுகா அலுவலகத்தில் நடந்த 2-வது கட்ட பேச்சுவார்த்தையிலும் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. இதனால் வருகிற 27-ந் தேதி தேர்தலை நடத்தக்கூடாது என்று தாசில்தார் அமுதா உத்தரவிட்டார்.
சிதம்பரம்,
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஊழியர்கள் சங்க தேர்தல் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடை பெறும். இதில் பல்கலைக்கழகத்தில் தேர்தல் அதிகாரி ஒருவரை நியமித்து தேர்தல் தேதி அறிவித்து ஊழியர்கள் ஓட்டுபோட்டு தலைவர், துணைத்தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர், இணை பொதுச்செயலாளர், பகுதி செயலாளர்களை தேர்ந்தெடுப்பார்கள். தற்போது ஊழியர்கள் சங்க தலைவராக இருந்த மனோகரின் பதவிக்காலம் 3 ஆண்டு காலம் முடிந்து விட்டது.
இந்த நிலையில் அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் கடந்த 12-ந் தேதி நடைபெற்றது. அந்த கூட்டத்தில் வருகிற 27-ந் தேதி சங்க தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் ஊழியர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இந்த தேர்தலில் மனோகர், மதியழகன், ரகு ஆகிய 3 அணிகள் போட்டியிடப்போவதாக அறிவித்திருந்தனர். இதற்கிடையில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இருந்து பணிநிரவல் என்ற காரணத்தினால் தமிழகத்தில் உள்ள அரசு கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு பணி இடமாற்றம் செய்யப்பட்ட ஊழியர்கள், தாங்களும் தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்தனர். எனவே இந்த தேர்தலில் 4 முனைப்போட்டி நிலவியது.
இதற்கிடையே 27-ந் தேதி புதன்கிழமை என்பதால், அன்றைய தினம் தேர்தல் வைக்கக்கூடாது எனவும், அன்றைய தினம் தேர்தல் நடத்தப்பட்டால் பணிமாற்றம் செய்யப்பட்டு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பணியாற்றுபவர்களால் ஓட்டுப்போட முடியாது.
எனவே தேர்தலை ஞாயிறு, திங்கள், வெள்ளி அல்லது சனிக்கிழமைகளில் வைக்க வேண்டும் என்று பணி இடமாற்றம் செய்யப்பட்ட ஊழியர்கள் தெரிவித்தனர். இதற்கு ஒரு அணியினர் எதிர்ப்பு தெரிவித்ததோடு, தேர்தல் தேதியை மாற்றக்கூடாது என்று கூறினர். இதனால் ஊழியர்களிடையே குழப்பமும், பிரச்சினையும் ஏற்பட்டது.
இது தொடர்பாக அமைதி பேச்சுவார்த்தை சிதம்பரம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் அமுதா தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் தேர்தலில் போட்டியிடும் 4 அணிகளை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அமைதி பேச்சுவார்த்தை தொடங்கியதில் இருந்தே 4 அணி ஊழியர்களிடையே கூச்சலும், குழப்பமும் ஏற்பட்டது. இதையடுத்து தாசில்தார் அமுதா அமைதி பேச்சுவார்த்தையை 18-ந் தேதிக்கு(நேற்று) ஒத்திவைத்தார்.
இதனை தொடர்ந்து நேற்று காலையில் சிதம்பரம் தாலுகா அலுவலகத்தில் 2-வது கட்ட அமைதி பேச்சுவார்த்தை தாசில்தார் அமுதா தலைமையில் நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் அண்ணா மலைநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரமணி, வருவாய் ஆய்வாளர் சசிக்குமார், கிராம நிர்வாக அலுவலர் சிவநேசன், அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர்கள் சங்க தேர்தல் அதிகாரி நடேசன் மற்றும் 4 அணிகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
பேச்சுவார்த்தை தொடங்கியதில் இருந்தே 4 அணி ஊழியர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. காரசார விவாதத்துடன் கூச்சலும், குழப்பமும் ஏற்பட்டது.
உடனே தாசில்தார் அமுதா, அவர்களை சமாதானப்படுத்த முயன்றார். அமைதி காக்குமாறு கூறினார். ஆனால் தொடர்ந்து அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து தாசில்தார் அமுதா பேசுகையில், அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர்கள் சங்க தேர்தல் நடத்துவதில் 4 அணிகளிடையே முரண்பாடான கருத்து நிலவுகிறது. அசாதாரணமான இந்த சூழ்நிலையில் தேர்தல் நடத்தினால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும். எனவே வருகிற 27-ந் தேதி தேர்தலை நடத்தக்கூடாது. அதற்கான ஆயத்தங்கள் செய்யக் கூடாது. அமைதி பேச்சுவார்த்தையில் 4 அணிகளிடையே சுமூக முடிவு ஏற்படாத காரணத்தினால் இந்த தேர்தல் நடத்துவது குறித்து நீதிமன்றத்தை அணுகலாம் என்றார்.
பேச்சுவார்த்தை முடிவடைந்ததையடுத்து ஊழியர்கள் அனைவரும் தாலுகா அலுவலகத்தைவிட்டு வெளியே வந்தனர். அப்போது 4 அணி ஊழியர்களும் ஒருவருக்கொருவர் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். உடனே போலீசார் தலையிட்டு அவர்களை அமைதியாக கலைந்துபோகச்செய்தனர். இந்த சம்பவத்தால் தாலுகா அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது.