வந்தவாசி அருகே வழிப்பறியில் ஈடுபட முயன்ற 2 பேரை அடித்து உதைத்த பொதுமக்கள்

வந்தவாசி அருகே தொழிலாளியிடம் வழிப்பறியில் ஈடுபட முயன்ற 2 பேரை பொதுமக்கள் பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர்.;

Update: 2018-06-18 22:30 GMT
வந்தவாசி, 

வந்தவாசியை அடுத்துள்ள வெண்குன்றம் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் (வயது 50), வந்தவாசியில் உள்ள பழ மண்டியில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் அதிகாலையில் வெண்குன்றம் மலைக்கு செல்லும் வழியில் தனியார் பள்ளிக்கு அருகில் உள்ள குழாயில் குளித்துவிட்டு வீட்டுக்கு செல்ல சைக்கிளில் ஏறினார்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் திடீரென அவரை வழிமடக்கி பணம் உள்ளதா? என கேட்டு தாக்கினர். பணம் இல்லை என பெருமாள் கூறியவுடன் அவரிடம் இருந்த செல்போனை பறித்து கொண்டு இருவரும் தப்பிக்க முயன்றனர். உடனே பெருமாள் மோட்டார் சைக்கிளை பிடித்து கொண்டு திருடன்... திருடன்... என கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கம் இருந்தவர்கள் ஓடிவந்து இருவரையும் பிடித்து சரமாரியாக தாக்கினர். இதனையடுத்து பொதுமக்கள், அவர்கள் 2 பேரையும் வந்தவாசி தெற்கு போலீசில் ஒப்படைத்தனர்.

வந்தவாசி போலீஸ் இன்ஸ்பெக்டர் கவுரி, வந்தவாசி தெற்கு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் வரதராஜ் மற்றும் போலீசார் அவர்கள் 2 பேரிடமும் விசாரணை நடத்தினர். விசாரணையில், தங்களுடன் ஒரே மோட்டார் சைக்கிளில் மேலும் 3 பேர் வந்ததாகவும், அவர்கள் காஞ்சீபுரம் சாலையில் சென்றுள்ளதாகவும் தெரிவித்தனர்.

5 பேர் கைது

உடனே போலீசார் காஞ்சீபுரம் சாலையில் சலுக்கை கூட்டுச்சாலை அருகே உள்ள கோவில் பகுதியில் மறைந்திருந்த 3 பேரை மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

இதனையடுத்து அவர்கள் 5 பேரிடம் விசாரணை மேற்கொண்டதில், வந்தவாசி டவுன் குளத்துமேட்டு பகுதியை சேர்ந்த ஆசிக் (20), இவரது நண்பர்களான காஞ்சீபுரத்தை சேர்ந்த தேவராஜ் (20), சையத்பாஷா (20), யுவராஜ் (20), தஸ்தகீர் (21) என்பதும், வந்தவாசி பகுதியில் திருட வந்ததும் தெரியவந்தது.

மேலும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மும்முனி கிராமத்தை சேர்ந்த ராஜ் என்பவரிடம் ரூ.2 லட்சத்து 41 ஆயிரம் திருடி சென்றவர்கள் என்பதும் தெரியவந்தது.

அதைத் தொடர்ந்து போலீசார் அவர்கள் 5 பேரையும் கைது செய்தனர். 

மேலும் செய்திகள்