திருப்பத்தூரில் கோவில், குடியிருப்பு அருகேயுள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் பொதுமக்கள், கலெக்டரிடம் மனு

திருப்பத்தூரில் கோவில், குடியிருப்பு அருகேயுள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

Update: 2018-06-18 22:22 GMT
வேலூர், 

வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார். அதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு, தங்கள் கோரிக்கைகள், குறைகள் ஆகியவற்றை மனுவாக எழுதி கொடுத்தனர்.

மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், தகுதியான மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

குறைதீர்வு நாள் கூட்டத்தில் கல்விக்கடன், முதியோர் உதவித்தொகை, புதிய ரேஷன் கார்டு உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 405 மனுக்கள் பெறப்பட்டன.

கொலை மிரட்டல்

சக்திசேனா இந்து மக்கள் இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ராஜகோபால், கலெக்டரிடம் கொடுத்த மனுவில், நான் இந்து இயக்கத்தில் இருப்பதால் என் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. விடுதலை சிறுத்தை கட்சி பிரமுகர் ஒருவர் நேற்று முன்தினம் என்னை கொன்று விடுவேன் என்று மிரட்டல் விடுத்து சென்றார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

நெமிலி சயனபுர கிராம மக்கள் கொடுத்த மனுவில், எங்கள் கிராமத்தில் கால்நடை பராமரிப்பு துறையின் மூலம் பார்வை கிளை நிலையம் செயல்படுகிறது. சுமார் 25 ஆயிரம் கால்நடைகள் உள்ளது. எனவே, பார்வை கிளை நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும். அவர்கள் அளித்த மற்றொரு மனுவில், எங்கள் கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் திடீரென நெல் கொள்முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அறுவடை இன்னும் முடியவில்லை. எனவே, மேலும் 20 நாட்களுக்கு நெல் கொள்முதலை நீட்டிக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

வீட்டிற்குள் சேர்க்க மறுக்கின்றனர்...

ஆற்காடு டவுன் கிழவி பஜாரை சேர்ந்த சுப்பிரமணி (வயது 73) மற்றும் அவரது மனைவி கஸ்தூரி (65) கண்ணீருடன் கலெக்டரிடம் அளித்த மனுவில், எங்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் இருக்கின்றனர். அவர்களை நன்றாக வளர்த்து படிக்க வைத்து திருமணம் செய்து வைத்தோம். கடந்த சில நாட்களுக்கு முன்பாக மகன்கள், வீட்டை தங்களின் பெயரில் எழுதி வாங்கி விட்டு வலுகட்டாயமாக வீட்டை விட்டு துரத்தி விட்டனர். தற்போது சென்னையில் உள்ள மகள் வீட்டில் வசித்து வருகிறோம். எங்களின் கடைசி காலத்தை எவ்வாறு கழிப்பது என தெரியவில்லை. மகன்கள் வீட்டிற்குள் சேர்க்க மறுக்கின்றனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும்

திருப்பத்தூரை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், திருப்பத்தூர் பழைய பஸ் நிலையம் அருகே சங்குசித்தி விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலின் அருகே டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இக்கடை திருப்பத்தூர் - சென்னை மெயின் சாலையில் இருந்து 20 அடி தூரமும் மற்றும் திருப்பத்தூர் டெக்ஸ்டைல்ஸ் மார்க்கெட்டில் இருந்து 5 அடி தூரத்திலும் உள்ளது. மேலும் 250-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இப்பகுதியில் வசித்து வருகின்றனர். இந்த வழியாக தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். டாஸ்மாக் கடை உள்ளதால் குடிமகன்களின் தொந்தரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பொதுமக்கள், மாணவர்கள் இந்த பகுதி வழியாக அச்சத்துடன் கடந்து செல்கின்றனர். எனவே டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்று கூறியிருந்தனர்.

நெமிலி பேரூராட்சி காவேரிபுரம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், எங்கள் கிராமத்தில் 250-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்கள் கிராமத்தில் குடியிருப்பு அருகே 1½ ஏக்கரில் ரூ.47 லட்சம் மதிப்பில் திடக்கழிவு மேலாண்மை குப்பை கிடங்கு திட்டம் செயல்படுத்த போவதாக பேரூராட்சி சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இதனால் எங்கள் கிராமத்தில் சுகாதார சீர்கேடு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை தடை செய்ய வேண்டும் என்று கூறியிருந்தனர்.

கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் முறைகேடு

குடியாத்தம் தாலுகா நெல்லூர்பேட்டை கணபதி நகரை சேர்ந்த சேகர் அளித்த மனுவில், நான் கணபதி கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க இயக்குனராக உள்ளேன். எங்கள் சங்கத்தில் பலவித முறைகேடுகள் நடந்துள்ளது. இதுதொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் சாகும்வரை அந்த அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடுவேன் என்று கூறியிருந்தார்.

கூட்டத்தில், நரிக்குறவர் நல வாரிய உறுப்பினர்கள் 11 பேருக்கு சுயதொழில் செய்ய ஒருவருக்கு ரூ.7,500 வீதம் ரூ.82,500 நிதியுதவியினை மின்னணு பரிமாற்றம் மூலம் பெறுவதற்கான உத்தரவுகளை கலெக்டர் ராமன் வழங்கினார்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலர் செங்கோட்டையன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ஜெயபிரகாஷ், சமூக பாதுகாப்புத்துறை தனித்துணை ஆட்சியர் பேபிஇந்திரா உள்பட பலர் கலந்துகொண்டனர். 

மேலும் செய்திகள்