வங்கியில் வேலை வாங்கி தருவதாக ரூ.2¼ லட்சம் மோசடி இளம்பெண், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார்

வங்கியில் வேலை வாங்கி தருவதாக ரூ.2 லட்சத்து 28 ஆயிரம் பெற்றுக்கொண்டு மோசடி செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இளம்பெண், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.

Update: 2018-06-18 22:19 GMT
வேலூர், 

ஆற்காடு டவுன் பேஸ்-2 பகுதியை சேர்ந்தவர் அனுசந்தா (வயது 22). இவர், நேற்று வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

நான் கல்லூரி முடித்துவிட்டு பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தேன். அப்போது திருச்சியை சேர்ந்த எனது தோழி, தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் வேலை உள்ளது. கோவையை சேர்ந்த ஒருவரிடம் ரூ.2 லட்சத்து 30 ஆயிரம் கொடுத்தால் வேலை கிடைக்கும் என்று கூறினார்.

இதையடுத்து அந்த நபரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினேன். அப்போது அவர் பணம் கொடுத்தால் சென்னையில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் 48 நாட்கள் பயிற்சி அளித்து, பின்னர் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் வேலை அளிக்கப்படும் என்று கூறினார். தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் முதற்கட்டமாக ரூ.48 ஆயிரம் வங்கி மூலமாக செலுத்தினேன். அதன் பின்னர் சில நாட்களில் பயிற்சியில் சேருவதற்கான ஆணை, அடையாள அட்டை ஆகியவற்றை தபாலில் அனுப்பி வைத்தனர்.

ரூ.2¼ லட்சம் மோசடி

இதனை நம்பி சில நாட்களில் ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் வங்கிக்கணக்கிற்கு அனுப்பி வைத்தேன். தொடர்ந்து சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் பயிற்சி மையத்துக்கு பயிற்சிக்கு சென்றேன். அங்கு வங்கி வேலை தொடர்பாக எதுவும் பயிற்சி அளிக்கப்படவில்லை. எனவே நான் கொடுத்த ரூ.2 லட்சத்து 28 ஆயிரத்தை திருப்பி தரும்படி கோவையை சேர்ந்த நபரிடம் கேட்டேன். அதற்கு அவர் பணத்தை வங்கியில் பணிபுரியும் உயர் அதிகாரி ஒருவரிடம் கொடுத்து விட்டதாகவும், அவரிடம் இருந்து சில நாட்களில் வாங்கி தருவதாகவும் கூறினார். ஆனால் இதுவரை பணத்தை பெற்று தராமல் மோசடி செய்து வருகிறார்.

எனவே, வங்கியில் வேலை வாங்கி தருவதாக பணம் பெற்று மோசடியில் ஈடுபட்ட நபர்கள் மீதும், நான் கொடுத்த ரூ.2 லட்சத்து 28 ஆயிரத்தை வாங்கி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

மனுவை பெற்றுக்கொண்ட போலீசார் இதுதொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.

மேலும் செய்திகள்