காசிமேட்டில் மாநகராட்சி ஊழியர் கொலை வழக்கில் 4 பேர் கைது

காசிமேட்டில் மாநகராட்சி ஊழியர் வெட்டி கொல்லப்பட்ட வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-06-18 21:48 GMT
திருவொற்றியூர், 

சென்னை காசிமேடு அமராஞ்சிபுரத்தை சேர்ந்தவர் சிவக்குமார்(வயது40). மாநகராட்சி ஊழியரான இவர் சென்னை மாநகராட்சி ராயபுரம் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதியில் மெக்கானிக் காக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று முன்தினம் காசிமேடு காசிபுரம் பி.பிளாக் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்தபோது மர்மநபர்களால் ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இது குறித்து காசிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில் இந்த கொலை தொடர்பாக எண்ணூர் தாழங்குப்பத்தை சேர்ந்த திவாகரன் (26), சுனாமி குடியிருப்பை சேர்ந்த ராகவன்(25), காசிமேட்டை சேர்ந்த வேணு(26), தேசப்பன் (27) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

கூலிப்படையை சேர்ந்தவர்கள்

அவர்கள் கூலிப்படையை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளிவந்தது.

காசிமேடு பவர்குப்பம் பகுதியில் கடந்த 2016-ம் ஆண்டு புதிதாக குடிசை மாற்று வாரிய குடியிருப்பு கட்டப்பட்டது. இதில் சிவக்குமார் தனக்கு வேண்டியவர்களுக்கு வீடுகள் ஒதுக்க உதவி உள்ளார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த கஞ்சா வியாபாரி தடி செந்தில் என்பவர் தனக்கு வேண்டியவர்களுக்கு வீடு கிடைக்க முயற்சி செய்துள்ளார். இதனை சிவக்குமார் தடுத்து விட்டதாக கூறப்படுகின்றது.

மேலும் சிலருக்கு வலைவீச்சு

மேலும் தடி செந்திலை போலீசில் பிடித்து கொடுத்தார். இந்த முன்விரோதம் காரணமாக ஆத்திரத்தில் இருந்து வந்த கஞ்சா வியாபாரி தடி செந்தில் கூலிப்படையை ஏவி சிவக்குமாரை தீர்த்துக்கட்டியது விசாரணையில் தெரியவந்தது.

தற்போது தடி செந்தில் ஒரு வழக்கில் கைதாகி புழல் ஜெயிலில் உள்ளார். அவரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். மேலும் இந்த கொலை வழக்கு தொடர்பாக 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்