திருச்சியில் கழிவுகளில் இருந்து மதிப்புமிக்க பொருள் தயாரிப்பதற்கான இறுதிப்போட்டி

திருச்சி தேசிய தொழில் நுட்ப கழகத்தில் கழிவுகளில் இருந்து மதிப்பு மிக்க பொருட்கள் தயாரிப்பதற்கான இறுதிப் போட்டியை மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

Update: 2018-06-18 22:30 GMT
திருச்சி,

‘மிடுக்கான இந்தியா- 2018’ எனும் போட்டி அகில இந்திய அளவில் 10 தேசிய தொழில் நுட்ப கல்லூரிகளில் நடைபெற உள்ளது. திருச்சி தேசிய தொழில்நுட்ப கல்லூரியும் (என்.ஐ.டி) இதில் ஒரு மையமாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது. திருச்சி மையத்தில் கழிவுகளில் இருந்து மதிப்புமிக்க பொருட்கள் தயாரிப்பது பற்றிய இறுதிப்போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்பதற்காக புனே, ஐதராபாத், உதய்பூர், சித்தூர் ஆகிய இடங்களில் இருந்து 35 இளம் கண்டு பிடிப்பாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். இவர்கள் வருகிற 22-ந்தேதிக்குள் தங்களது கண்டு பிடிப்புகளை இறுதி செய்யவேண்டும்.

இந்த இறுதிப்போட்டிகளின் தொடக்க விழா நேற்று திருச்சி என்.ஐ.டி.யில் நடந்தது. என்.ஐ.டி. இயக்குனர் மினி ஷாஜி தாமஸ் தலைமை தாங்கி வரவேற்று பேசினார். திருச்சி மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். மத்திய மனித வளமேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் டெல்லியில் இருந்தபடியே காணொலி காட்சி மூலம் இந்த போட்டியை தொடங்கி வைத்து பேசினார்.

திருச்சி மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் போட்டியாளர்களை வாழ்த்தி பேசும்போது ‘சுப்ரீம் கோர்ட்டு ஆளுமை விதியின்படி கழிவுகள் மேலாண்மை என்பது நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனின் கடமை. கழிவுகளில் இருந்து எரிவாயு தயாரிப்பதன் மூலமும், பிளாஸ்டிக் ஒழிப்பு மூலமும் திருச்சி மாநகராட்சிக்கு கிடைக்கும் வருவாய் நமது மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும்’ என்றார். முடிவில் போட்டியின் ஒருங்கிணைப்பாளர் பாஸ்கர் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்