முத்தியால்பேட்டை தொகுதியில் உள்ள 2 சாராய கடைகளின் ஏலத்தை ரத்த செய்ய வேண்டும்

புதுச்சேரி முத்தியால்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. வையாபுரி மணிகண்டன், கவர்னர் கிரண்பெடியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.

Update: 2018-06-18 22:30 GMT

புதுச்சேரி,

மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் புதுவை முத்தியால்பேட்டை தொகுதியும் இணைக்கப்பட உள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்தும் பகுதிகளில் கள் மற்றும் சாராயக்கடை இருக்கக்கூடாது என்பது விதிமுறை. அதன்படி முத்தியால்பேட்டை தொகுதியில் உள்ள 2 சாராயக்கடைகள் உள்பட புதுச்சேரி நகரில் உள்ள 5 சாராய கடைகள் அகற்றப்பட்டன. இது குறித்து அரசிதழிலும் அறிவிப்பு வெளியானது. இதனைத் தொடர்ந்து மீதியுள்ள சாராய கடைகளுக்கு ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் முத்தியால்பேட்டை தொகுதியில் அகற்றப்பட்ட 2 சாராய கடைகளை மீண்டும் ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் அந்த பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் வராத நிலை உருவாகும். எனவே இந்த வி‌ஷயத்தில் கவர்னர் நேரடியாக தலையிட்டு முத்தியால்பேட்டை தொகுதியில் உள்ள 2 சாராய கடைகளின் ஏலத்தை ரத்த செய்ய வேண்டும். திட்டமிட்ட படி முத்தியால்பேட்டை தொகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை செயல்படுத்தி வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின்போது வையாபுரி மணிகண்டனுடன் எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், பாஸ்கர் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்