மாநகராட்சி, நகராட்சிகளில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள துப்புரவு, குடிநீர் பணியாளர்கள், வாகன ஓட்டுனர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டரிடம், உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தினர் மனுகொடுத்தனர்.

Update: 2018-06-18 22:45 GMT

திருப்பூர்,

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமை தாங்கினார்.

மாவட்ட வருவாய் அதிகாரி பிரசன்னா ராமசாமி முன்னிலைவகித்தார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்தவர்கள் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்தனர். அந்த வகையில், திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி, உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தினர் மனு ஒன்றை கொடுத்தனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:–

திருப்பூர் மாநகராட்சி, உடுமலை, பல்லடம், தாராபுரம், வெள்ளகோவில், காங்கேயம் உள்ளிட்ட நகராட்சிகளில் தினக்கூலி மற்றும் ஒப்பந்த அடிப்படையில் குடிநீர், துப்புரவு பணியாளர்களும் ஓட்டுனர்களும் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் மற்றும் அகவிலைப்படிக்காக அரசாணை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை அவை வழங்கப்படவில்லை.

இதனால் உடனடியாக அரசாணையின்படி ஊதிய உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அனைத்து ஊராட்சிகளிலும் வேலை செய்யும் குடிநீர் குழாய் ஆபரேட்டர்கள் மற்றும் துப்புரவு ஊழியர்களுக்கு 7–வது ஊதியக்குழு பரிந்துரைப்படி ஊதியம் மற்றும் நிலுவை தொகைகளை வழங்க வேண்டும். இதுமட்டுமின்றி துப்புரவு தொழிலாளர்களுக்கான முகக்கவசம், கையுறை உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் முறையாக இதுவரை வழங்கப்படவில்லை. இதை வழங்க வேண்டும். தொழிலாளர்களிடம் இருந்து பிடித்தம் செய்யப்படும் வருங்கால வைப்பு நிதிக்கான ரசீதுகளும், இ.எஸ்.ஐ.க்கான அட்டைகளையும் உடனடியாக வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தாராபுரம் தாலுகா கமிட்டி சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:–

தாராபுரம் நகராட்சிக்கு சொந்தமான 100–க்கும் மேற்பட்ட கடைகள் முறையாக ஏலம் விடப்பட்டது. ஆனால் பெரும்பாலான கடை உரிமையாளர்கள் நிர்ணயிக்கப்பட்ட தொகையை இதுவரை செலுத்தவில்லை. இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு இருந்து வருகிறது. இதனால் ஆண்டுதோறும் பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு அரசுக்கு ஏற்பட்டு வருகிறது. இதனால் இந்த கடைகளை மீண்டும் ஏலத்திற்கு விட நடவடிக்கை எடுக்க வேண்டும். அலங்கியம் உள்வட்டம் சீதக்காட்டு பகுதியில் உள்ள நீர்நிலைகளில் இருந்து குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இதனால் குழாய்களை அப்புறப்படுத்தி தண்ணீர் திருட்டை தடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

உடுமலை சுண்டக்காம்பாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:–

எங்கள் பகுதியில் 100–க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் குடும்பத்தினர் வசித்து வருகிறோம். ஆனால் நாங்கள் குடியிருக்க இடம் இல்லாமல் நெருக்கடியில் வாழ்ந்து வருகிறோம். இதனால் எங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல முறை மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதனால் உடனடியாக எங்கள் கோரிக்கை மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்