கோரிப்பாளையம் பறக்கும் பாலம்: நிலம் கையகப்படுத்துவதற்கு ஐகோர்ட்டு இடைக்கால தடை

கோரிப்பாளையம் பறக்கும் பாலம் அமைக்க நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2018-06-18 22:00 GMT

மதுரை,

மதுரை அமெரிக்கன் கல்லூரி செயலாளரும், முதல்வருமான தவமணி கிறிஸ்டோபர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–

மதுரை அமெரிக்கன் கல்லூரி 1881–ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 45 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த கல்லூரியில் பல்வேறு பட்டப்படிப்புகளில் தற்போது 5 ஆயிரம் மாணவர்கள் படிக்கிறார்கள். இந்த நிலையில் மதுரை கோரிப்பாளையம் பகுதியில் பறக்கும் மேம்பாலம் அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக வருவாய் அதிகாரி கடந்த சில மாதங்களுக்கு முன்பு நோட்டீஸ் அனுப்பினார். பின்னர் அந்த அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டது.

இந்த நிலையில் கோரிப்பாளையம் பறக்கும் பாலத்துக்காக மாவட்ட வருவாய் அதிகாரி சார்பில் மீண்டும் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்டவர்களிடம் கருத்து கேட்கப்படவில்லை. இதில் உரிய விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை. மேலும் பறக்கும் சாலைக்காக நிலம் கையகப்படுத்தப்பட்டால் கல்லூரி வளாகத்தில் உள்ள பழமையான கட்டிடம் பாதிக்கப்படும். எனவே கோரிப்பாளையம் பறக்கும் பாலத்துக்காக நிலம் கையகப்படுத்தும் பணி தொடர்பான நோட்டீசை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி கோவிந்தராஜ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

முடிவில், கோரிப்பாளையம் பறக்கும் பாலத்துக்கு நிலம் கையகப்படுத்துவது தொடர்பான நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பதில் அளிக்கவும் நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்