400–க்கும் மேற்பட்டோர் புகார் நிதி நிறுவனங்கள் நடத்தி ரூ.360 கோடி மோசடி

மதுரையில் பிளசிங் குரூப் ஆப் கம்பெனி பெயரில் நிதி நிறுவனங்கள் இயங்கி வந்தன.

Update: 2018-06-18 21:30 GMT

மதுரை,

மதுரை பை–பாஸ் ரோடு மற்றும் எஸ்.எஸ்.காலனி பகுதியில் பிளசிங் குரூப் ஆப் கம்பெனி பெயரில் நிதி நிறுவனங்கள் இயங்கி வந்தன. இதன் இயக்குனர்களான ஜோசப்ஜெயராஜ், ஜெயபாலன், சந்தான பீட்டர், பாக்கியசாந்தி, சகாய சாந்தி உள்ளிட்டோர் கூட்டாக சேர்ந்து பொதுமக்களிடம் பணம் வசூலித்து மோசடி செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தென்காசி, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்தும் இந்த நிதி நிறுவனங்களால் பாதிக்கப்பட்ட 400–க்கும் மேற்பட்டவர்கள் நேற்று காலை மதுரை விஸ்வநாதபுரத்தில் செயல்பட்டு வரும் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் தங்களின் பணத்தை மேற்படி நிதி நிறுவனம் மோசடி செய்ததாகவும், அவர்கள் மொத்தம் சுமார் ரூ.360 கோடி மோசடி செய்ததாகவும் புகார் மனு கொடுத்தனர். அந்த மனுவை பெற்றுக் கொண்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

எனவே அந்த நிதி நிறுவனங்களில் பணம் முதலீடு செய்து பாதிக்கப்பட்டவர்கள் மதுரை விஸ்வநாதபுரத்தில் செயல்பட்டு வரும் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் உரிய ஆவணங்களை காட்டி புகார் அளிக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்