ஈரோட்டில் வனக்காப்பாளரை காரில் கடத்தி அடித்து உதைத்த கும்பல் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டு தலைமறைவு

ஈரோட்டில் இருந்து கோவைக்கு வனக்காப்பாளரை காரில் கடத்தி அடித்து உதைத்த கும்பல், அவரை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டு தலைமறைவானது.

Update: 2018-06-18 23:15 GMT

ஈரோடு,

ஈரோடு ஆசிரியர் காலனி கண்ணகி வீதியை சேர்ந்தவர் பிரபு (வயது 41). ஈரோடு வனச்சரகத்துக்கு உள்பட்ட அறச்சலூர் வனப்பகுதியில் வனக்காப்பாளராக வேலை செய்து வருகிறார். இவர் அறச்சலூரில் உள்ள வனத்துறை குடியிருப்பில் தங்கி இருந்து வேலைக்கு சென்று வந்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை ஆசிரியர் காலனி கண்ணகி வீதியில் உள்ள வீட்டுக்கு பிரபு மோட்டார் சைக்கிளில் வந்தார். வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு, வீட்டுக்குள் செல்ல முயன்றார். அப்போது அங்கு காரில் வந்து இறங்கிய சிலர் பிரபுவை குண்டுக்கட்டாக தூக்கி காரில் போட்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

இந்தநிலையில் அவர் கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு இருப்பதாக ஈரோடு சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதைத்தொடர்ந்து போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது பிரபுவை கடத்திச்சென்றவர்கள் காரில் வைத்தே அவரை அடித்து உதைத்தது தெரிய வந்தது. மேலும் இதுபற்றி போலீசார் தெரிவித்ததாவது:–

வனக்காப்பாளர் பிரபுவுக்கு திருமணம் ஆகி 7 ஆண்டுகள் ஆகிறது. கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை விட்டு பிரிந்து வாழ்ந்த பிரபுவுக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்து கிடைத்தது. அதன்பின்னர் அறச்சலூரில் தனியாக தங்கி இருந்து வேலைக்கு சென்று வந்தார். அவ்வப்போது கண்ணகி வீதியில் வசித்து வரும் தாயார் சரஸ்வதியை சந்திக்க வந்து செல்வார்.

பிரபுவின் நண்பர் ஒருவர், பலரிடம் அரசு வேலை வாங்கித்தருவதாக பணம் பெற்று வந்ததாக தெரிகிறது. இதற்கு பிரபுவும் உடந்தையாக இருந்து உள்ளார். அப்படி பணம் கொடுத்து ஏமாந்த யாரோ சிலர் கும்பலாக வந்து பிரபுவை கடத்திச்சென்றனர். காரில் செல்லும்போதே உள்ளே வைத்து பிரபுவை அடித்து உதைத்தனர். பின்னர் அவரை கோவைக்கு கொண்டு சென்ற அவர்கள் அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டு அங்கிருந்து தலைமறைவானார்கள். காரில் 4 பேர் கொண்ட கும்பல் பிரபுவை கடத்திச்சென்று தாக்கியதாக அவர் தெரிவித்து உள்ளார்.

இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

இதுபற்றி சூரம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ராஜகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். பிரபு உண்மையில் பண வி‌ஷயத்துக்காகத்தான் கடத்தப்பட்டாரா?. அவருடைய நண்பர் யார்? கடத்திச்சென்றவர்கள் யார்? அவர்கள் ஏன் ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டு சென்றனர்? என்றும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

கடத்திச்சென்றவர்களை அடையாளம் தெரியும் என்று பிரபு கூறி இருக்கிறார். அவர் கூறிய அடையாளங்களை வைத்து, தலைமறைவான 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். வனக்காப்பாளர் ஒருவர் காரில் கடத்திச்செல்லப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்