சேலம்– சென்னை 8 வழி பசுமை சாலை பொதுமக்களுக்கு மிகவும் அவசியம் - அமைச்சர் கே.சி.கருப்பணன் பேட்டி

சேலம்– சென்னை 8 வழி பசுமை சாலை பொதுமக்களுக்கு மிகவும் அவசியம் என்று அம்மாபேட்டையில் அமைச்சர் கே.சி.கருப்பணன் பேட்டி அளித்தார்.

Update: 2018-06-18 23:00 GMT

அம்மாபேட்டை,

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள குருவரெட்டியூரை அடுத்த கோனார்பாளையம் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்களை அறிவியல் தொழில்நுட்பத்துடன் மேம்படுத்தும் வகையில் திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பு (ஸ்மார்ட் கிளாஸ்) அமைக்க தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் ரூ.2 லட்சம் நிதி உதவி அளித்தனர். இதைத்தொடர்ந்து திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பு கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது.

விழாவுக்கு அமைச்சர் கே.சி.கருப்பணன் தலைமை தாங்கி திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பை திறந்து வைத்து பேசினார். விழாவில் அம்மாபேட்டை ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் வி.எஸ்.சரவணபவா, வட்டார கல்வி அதிகாரி ஜெகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஆசிரியர்கள், மாணவ– மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பள்ளியின் தலைமை ஆசிரியை எம்.அமலிராணி வரவேற்று பேசினார். முடிவில் ஆசிரியை பூங்கொடி நன்றி கூறினார்.

பின்னர் அமைச்சர் கே.சி.கருப்பணன், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வி துறை சார்பில் மாணவ– மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி, சைக்கிள், சீருடை, பாடப்புத்தகங்கள் என ரூ.27 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழக பள்ளிக்கல்வி துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

சேலம்– சென்னை மற்றும் சேலம்– கோவை இடையே அமைக்கப்படும் 8 வழி பசுமை சாலை பொதுமக்களுக்கு மிகவும் அவசியம். அவ்வாறு 8 வழி பசுமை சாலை அமைந்தால் சேலத்தில் இருந்து 6 மணி நேரத்தில் சென்னை செல்லும் பயணிகள் 4 மணி நேரத்தில் சென்றடையலாம். ஆனால் எதிர்க்கட்சிகளின் தூண்டுதலால் இந்த திட்டத்துக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த திட்டத்தினால் ஏற்படும் இழப்பீடுகளை ஏற்கும் வகையில் சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய நிதி வழங்க அரசு தயாராக உள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் வாயு கசிந்ததாக தகவல் வெளியானது. இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் மூலம் ஒரு குழு ஸ்டெர்லைட் ஆலை கசிவை ஆய்வு செய்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்