கன்னியாகுமரியில் நடைபெறவுள்ள குமரித்திருவிழா பணிகளை கலெக்டர் ஆய்வு
கன்னியாகுமரியில் நடைபெற உள்ள குமரித்திருவிழா பணிகளை கலெக்டர் பிரசாந்த் வடநேரே ஆய்வு செய்தார்.
கன்னியாகுமரி,
கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் குமரித்திருவிழா வருகிற 21-ந்தேதி தொடங்கி 4 நாட்கள் நடைபெறுகிறது. இந்த விழா கன்னியாகுமரி கடற்கரை சாலையில் அமைந்துள்ள பூம்புகார் கைவினைப்பொருட்கள் நிரந்தர கண்காட்சி திடலில் நடக்கிறது. இதற்காக அங்கு பிரமாண்டமான பந்தல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. விழாவின் முதல் நாள் பரதநாட்டியம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது. 2-வது நாள் உணவுத்திருவிழா மற்றும் நாய் கண்காட்சி நடைபெறுகிறது. விழா நாட்களில் இரவு நையாண்டி மேளம், கரகாட்டம், மெல்லிசை கச்சேரி, சிலம்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு கிராமி கலைநிகழ்ச்சிகளும், குமரி மாவட்ட அனைத்து துறை சாதனை விளக்க கண்காட்சியும் நடைபெறுகிறது.
மேலும், கோலப்போட்டி, கொழுகொழு குழந்தை போட்டி, படகு போட்டி, வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி ஆகியவைகள் நடைபெற உள்ளது.
இந்த விழாவுக்கான முன்னேற்பாடுகளை ஆய்வு செய்ய மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே நேற்று மாலையில் கன்னியாகுமரி வந்தார். அப்போது, விழாவுக்கு பந்தல் அமைக்கும் இடம், கண்காட்சி அமையும் இடம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது, கூடுதல் கலெக்டர் ராகுல்நாத், மாவட்ட சுற்றுலாத்துறை அதிகாரி நெல்சன், கன்னியாகுமரி பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கடேசன், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக மேலாளர் ஜாக்சன் வில்லியம், பூம்புகார் கைவினை பொருட்கள் விற்பனை மேலாளர் லெட்சுமணன், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக உதவி செயற்பொறியாளர் பால் ஜெப ஞானதாஸ், அரசு தோட்டக்கலை பண்ணை மேலாளர் சரவணன் உள்பட பலர் உடன் இருந்தனர்.