தக்கலை அருகே இளம்பெண்ணை எரித்துக் கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை: கோர்ட்டு தீர்ப்பு

தக்கலை அருகே இளம் பெண்ணை எரித்துக்கொன்ற வழக்கில் கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நாகர்கோவில் மகிளா கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு கூறியது.

Update: 2018-06-18 23:15 GMT
நாகர்கோவில்,

தக்கலை அருகே உள்ள திருவிதாங்கோடு ஹாஜியார் தெருவை சேர்ந்தவர் சாகுல் ஹமீது (வயது 39), இறைச்சிக்கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி பாத்திமா (28). இவர்களுக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். கடந்த 25.7.2011 அன்று அதிகாலையில் சாகுல் ஹமீது வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அவருக்கு அருகே பிள்ளைகளும் தூங்கி கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் பள்ளிக்கூடத்துக்கு அனுப்புவதற்காக பிள்ளைகளை பாத்திமா எழுப்பினார். ஆனால், பிள்ளைகள் எழும்ப மனமில்லாமல் படுத்திருந்தனர். இதனால் அவர்களை திட்டியபடியே, பாத்திமா வீட்டு வேலைகளை கவனித்துக்கொண்டிருந்தார். தொடர்ந்து பாத்திமாவின் சத்தம் கேட்டு விழித்துக் கொண்ட சாகுல் ஹமீது, சத்தம் போடாமல் வேலைகளை கவனிக்க மாட்டாயா? என கேட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து கணவன்-மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த சாகுல் ஹமீது, மனைவி என்றும் பாராமல் பாத்திமாவை அடித்து-உதைத்து வீட்டின் சமையல் அறைக்குள் கீழே தள்ளினார். இதையடுத்து, சமையலறையில் இருந்த மண்எண்ணெய் கேனை எடுத்து வந்து பாத்திமா மீது ஊற்றி ‘தீ‘யை பற்ற வைத்தார்.

உடலில் பற்றி எரிந்த தீயால் பாத்திமா அலறி துடித்தார். இதை தடுக்க வந்த பிள்ளைகளையும் அவர், அடித்து மிரட்டினார். பாத்திமாவின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், அவர் உடலில் பற்றி எரிந்த தீயை அணைத்து அருகில் இருந்த ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை முயற்சி சம்பவம் தொடர்பாக சாகுல் ஹமீது மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இதற்கிடையே மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் பாத்திமா அனுமதிக்கப்பட்டார்.

அங்கு தீவிர சிகிச்சையில் இருந்து வந்த அவர், சிகிச்சை பலனின்றி 13.11.2011 அன்று உயிரிழந்தார். இதையடுத்து போலீசார் கொலை முயற்சி வழக்கை, கொலை வழக்காக பதிவு செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு, நாகர்கோவில் மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை நீதிபதி ஜான்.ஆர்.டி.சந்தோசம் விசாரித்து வந்தார். இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில், சாகுல் ஹமீதுக்கு ஆயுள்தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தும் நீதிபதி ஜான்.ஆர்.டி.சந்தோசம் தீர்ப்பு கூறினார்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ஆர்.எம்.மீனாட்சி ஆஜராகி வாதாடினார்.

மேலும் செய்திகள்