நாகர்கோவிலில் நடைபாதையை ஆக்கிரமித்து கடைகள் அமைத்தால் கடும் நடவடிக்கை: நகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை
நாகர்கோவில் நகர பகுதியில் நடைபாதையை ஆக்கிரமித்து கடைகள் அமைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி ஆணையாளர் சரவணக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.;
நாகர்கோவில்,
நாகர்கோவில் நகரின் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் நகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகள் மற்றும் கட்டிடங்களை நகராட்சி அதிகாரிகள் அகற்றி வருகின்றனர்.
இந்தநிலையில் நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் இருந்து அண்ணா பஸ்நிலையம் செல்லும் சாலையில் நடைபாதையின் இருபுறங்களையும் ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்பட்டு இருப்பதால் நடந்து செல்லும் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படுவதாக நகராட்சி அதிகாரிகளுக்கு புகார் வந்தது.
இதைதொடர்ந்து, நகராட்சி ஆணையாளர் சரவணக்குமார் தலைமையில் நகராட்சி அதிகாரிகள் நேற்று அப்பகுதியில் திடீர் ஆய்வு நடத்தினர்.
அப்போது ஆணையாளர் கூறியதாவது:-
நடைபாதையை ஆக்கிரமித்து கடைகள் அமைப்பதால் பொதுமக்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்படுகிறது.
வியாபாரிகள் தங்களின் தொழிலை தடையின்றி தொடர, நகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள கடைகளை ஏலம் எடுத்து அதன் மூலம் தொழிலை விரிவுபடுத்தலாம். நடைபாதை கடைகளை உடனே அகற்ற வேண்டும். எச்சரிக்கையை மீறி, நடைபாதையை ஆக்கிரமித்து கடைகள் அமைத்தால் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் நகராட்சி அதிகாரிகள், மீனாட்சிபுரம் செம்மாங்குடி ரோட்டில் ஆய்வு நடத்தினர். அப்போது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருந்த ஆட்டோ நிறுத்தம் மற்றும் தள்ளுவண்டி கடைகளை அகற்றும்படி அதிகாரிகள் கூறினர்.
ஆய்வின்போது, நாகர்கோவில் போக்குவரத்து ஒழுங்குபிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள் ஜாண்ஒய்சிலி ராஜ் மற்றும் நகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.