கீழடியில் 4–வது கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் 8 அடுக்கு உறை கிணறுகள், கத்தி, கோடரி உள்ளிட்ட பொருட்கள் கண்டெடுப்பு

திருப்புவனம் அருகே கீழடியில் தற்போது நடைபெற்ற 4–வது கட்ட அகழ்வாராய்ச்சி பணியின் போது 8 அடுக்கு உறை கிணறுகள், கத்தி, கோடரி, கண்ணாடி மணிகள், தாயக்கட்டைகள், அணிகலன்கள் உள்ளிட்ட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

Update: 2018-06-18 22:15 GMT

திருப்புவனம்,

திருப்புவனம் யூனியனை சேர்ந்தது கீழடி ஊராட்சி. இந்த ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் மத்திய தொல்லியல்துறை சார்பில் பண்டைய தமிழர் நாகரிகத்தை அறியும் வகையில் அகழ்வாரய்ச்சி பணிகள் நடைபெற்றது. முதன் முதலாக கடந்த 2015–ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் தொடங்கியது. இதில் மொத்தம் 42 குழிகள் தோண்டப்பட்டன. தோண்டப்பட்ட குழிகளில் உறை கிணறுகள், பானை ஓடுகள், கண்ணாடி மணிகள், தங்கத்தால் ஆன தாயக்கட்டைகள் உள்பட 4,125 பொருட்கள் கிடைத்தன.

இந்த அகழ்வாராய்ச்சிகளை சமூக ஆர்வலர்கள், பள்ளி மாணவ–மாணவிகள், கல்லூரி மாணவ–மாணவிகள், பொதுமக்கள் பார்த்து ஆச்சரியமடைந்தனர். அதன் பின்னர் 2016–ம் ஆண்டு ஜனவரி மாதம் 2–வது கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் தொடங்கின. இதில் வீடுகள், செங்கற்களால் ஆன பெரிய சுவர்கள், தண்ணீர் தொட்டிகள், மருத்துவ குடுவைகள், இரும்பால் ஆன ஈட்டிகள், கத்தி உள்ளிட்ட இரும்பு ஆயுதங்கள் உள்பட 1,893 பொருட்கள் கிடைத்தன. அதன் பின்னர் 3–வது கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் கடந்த 2017–ம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கி அதன் பின்னர் தாமதம் ஏற்பட்டு பின்பு பணிகள் நடைபெற்றன.

இதில் பெண்கள் அணியும் ஆபரணங்கள், பவளம், பச்சை, மஞ்சள், நீற நிலம் கண்ணாடி மணிகள் உள்ளிட்ட 1,500 பொருட்கள் கிடைத்தன. இந்த அகழ்வாராய்ச்சி பணிகளை மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் சுந்தரேஷ், சதிஷ்குமார் மற்றும் பலர் கடந்தாண்டு செம்டம்பர் 19–ந்தேதி அன்று நேரடியாக ஆய்வு மேற்கொண்டு இதுகுறித்த விவரங்களை கேட்டறிந்தனர்.

அதுசமயம், முதல் மற்றும் 2–வது கட்ட அகழ்வாராய்ச்சிக்கு நிலம் வழங்கிய விவசாயிகள் தங்களுக்கு தகுந்த இழப்பீடு தரவில்லை என்றும், இதனால் 4–வது கட்ட அகழ்வாராய்ச்சிக்கு நிலம் தரமுடியாது எனவும் புகார் மனு கொடுத்தனர். கடந்தஆண்டு செப்டம்பர் மாதம் 3–வது கட்ட ஆராய்ச்சி நிறைவு பெற்றது. பின்பு கடந்தஆண்டு அக்டோபர் மாதம் 31–ந்தேதி தமிழக அமைச்சர்கள் பாண்டியராஜன், பாஸ்கரன் ஆகியோர் இங்கு வந்து பார்வையிட்டு விவரங்களை கேட்டறிந்தனர்.

அப்போது அமைச்சர் பாண்டியராஜன் கூறும்போது, 3–வது கட்ட அகழ்வாராய்ச்சி பணிகளும் சேர்த்து மொத்தம் 7,518 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டது. 4–வது கட்ட அகழ்வாராய்ச்சி பணிக்கு வேறு இடம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடைபெறும் என்றார். மேலும்

மாநில அரசு சார்பில் ரூ.55லட்சம் நிதி ஒதுக்கப்படும் என்றும் கூறினார். 4–வது கட்ட அகழ்வாராய்ச்சி முடிந்து 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்களுடன் ஒருங்கிணைந்த தமிழர்களின் வரலாறுகள் என புதுகருத்து உருவாக்க உள்ளோம். இங்கு மியூசியம் அமைக்க ஒரு ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு ரூ.1கோடி மதிப்பீட்டில் மியூசியம் கட்டப்படும் என்றும் அப்போது அவர்தெரிவித்தார்.

இதையடுத்து 4–வது கட்ட பணிகள் தொடருவதற்கு விவசாயிகள் நிலம் தராததால் பல்வேறு முறைகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அதில் முடிவு கிடைக்காமல் பின்பு தாமதமாக தமிழ்நாடு தொல்லியல் துறை மூலம் கடந்த ஏப்ரல் மாதம் தொடர்ந்து இந்த பணிகள் நடைபெற்று வருகிறது.

இதில் 21 குழிகள் தோண்டப்பட்டு அகழ்வாராய்ச்சி பணிகள் தற்சமயம் நடைபெற்று வருகிறது. இந்த பணியின் போது செம்பு நாணயங்கள், 8அடுக்கு உறை கிணறுகள், கத்தி, கோடரி, கண்ணாடி மணிகள், தாயக்கட்டைகள், அணிகலன்கள் என இதுவரை 3ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்துள்ளன. மேலும் இந்த பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக மாநில தொல்லியல் துறை சார்பில் இந்த பணியில் ஈடுபட்டு வரும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்