போலி பாஸ்போர்ட்டு கொடுத்து வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாக பணம் மோசடி செய்த தம்பதி

வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாக கூறி போலி பாஸ்போர்ட்டு கொடுத்து பணம் மோசடி செய்ததாக கணவன்–மனைவி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Update: 2018-06-18 21:45 GMT

பனைக்குளம்,

ராமநாதபுரம் வெளிபட்டணத்தை சேர்ந்தவர் ஜீவரத்தினம். இவரது மகன் வர்ணசிங்(வயது 24). இவர் வெளிநாட்டு வேலைக்கு செல்ல விரும்பினார். அதைத்தொடர்ந்து வெளிநாடுகளுக்கு ஆள் அனுப்பும் பனைக்குளம் கிழக்கு பகுதியில் வசித்து வரும் உதுமான் அலி என்பவரை சந்தித்து விவரங்களை கூறினர்.

அப்போது சவுதி அரேபியாவில் வேலை வாங்கித்தருவதாக கூறிய உதுமான் அலி அதற்கு பாஸ்போர்ட்டு எடுக்க வேண்டும் என்று கூறி முன்பணமாக ரூ.50 ஆயிரம் வாங்கினாராம். பின்னர் அவரது மனைவி பாத்துமுத்துவிடம் வர்ணசிங் ரூ.40 ஆயிரம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

இவ்வாறு மொத்தம் ரூ.90 ஆயிரம் பெற்றுக்கொண்ட கணவனும், மனைவியும் வர்ணசிங்கிடம் ஒரு பாஸ்போர்ட்டை கொடுத்துள்ளனர். பின்னர் அது போலி என்பது தெரியவந்ததும், வர்ணசிங் தான் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டுள்ளார். அப்போது கணவனும், மனைவியும் சேர்ந்து அவரை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் தேவிபட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துபிரேம் வழக்கு பதிவு செய்து தம்பதியிடம் விசாரித்து வருகிறார்.

மேலும் செய்திகள்