சூலூர் அருகே மொபட் மீது அரசு பஸ் மோதி 2 பேர் பலி வாலிபர் படுகாயம்
சூலூர் அருகே அரசு பஸ் மோதிய விபத்தில் 2 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் ஒரு வாலிபர் படுகாயம் அடைந்தார். இதைத்தொடர்ந்து அரசு பஸ் டிரைவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சூலூர்,
பீகார் மாநிலம் இந்தாப்பூர் பகுதியை சேர்ந்தவர்கள் சோனு குமார் (வயது 24), அரவிந்த் கேவிட் (50), கமலேஷ் கேவாட் (30). நண்பர்களாகிய இவர்கள் 3 பேரும் சூலூரை அடுத்த அரசூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் 1.30 மணியளவில் 3 பேரும் ஒரே மொபட்டில் தென்னம்பாளையம் சென்று காய்கறி வாங்கிவிட்டு திரும்பினர். அரசூர் மின்சார வாரிய அலுவலகம் அருகே வந்தபோது மொபட் மீது அந்த வழியாக வந்த அரசு பஸ் மோதியது. இதில் மொபட்டில் வந்த 3 பேரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர்.
இதைத்தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில் சோனு குமார் மற்றும் அரவிந்த் கேவிட் ஆகியோர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தனர். படுகாயம் அடைந்த கமலேஷ் கேவாட் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த சூலூர் போலீசார், அரசு பஸ் டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மொபட் மீது பஸ் மோதிய வேகத்தில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி தூள் தூளாக உடைந்தது. சூலூர் பகுதியில் கடந்த வாரம்தான், தனியார் பஸ் மோதி முதியவர் ஒருவர் பலியான நிலையில், தற்போது அரசு பஸ் மோதி 2 பேர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, சூலூர் பகுதியில் தனியார் மற்றும் அரசு பஸ் உள்ளிட்ட வாகனங்கள் வேகமாக செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் சாலையில் வாகனங்களை ஓட்டி செல்வது பெரும் சவாலாக உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.