பட்ஜெட் தயாரிப்புக்கான ஆலோசனை கூட்டம் கால அட்டவணையை குமாரசாமி அறிவித்தார்

சித்தராமையாவின் எதிர்ப்பை நிராகரித்துவிட்ட குமாரசாமி, பட்ஜெட் தயாரிப்புக்கான ஆலோசனை கூட்டம் தொடர்பான கால அட்டவணையை அறிவித்தார்.

Update: 2018-06-18 00:08 GMT
பெங்களூரு,

கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்துள்ளது. குமாரசாமி முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். ஜூலை மாதம் புதிய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று அவர் அறிவித்தார். இதற்கு முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஏற்கனவே பட்ஜெட் தாக்கல் செய்து இருப்பதாகவும், அதனால் புதிதாக பட்ஜெட் தாக்கல் செய்ய தேவை இல்லை என்றும் கூறினார். தேவைப்பட்டால் அந்த பட்ஜெட்டுடன் சேர்த்து சில திட்டங்களை அறிவித்து கொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.

இதை குமாரசாமி ஏற்கவில்லை. புதிய கூட்டணி அரசின் நோக்கம் என்ன என்பதை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டியுள்ளதாகவும், அதனால் புதிய பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டியது அவசியம் என்றும் குமாரசாமி கூறினார். பட்ஜெட் தாக்கல் செய்தால் எங்கு தனக்கு நற்பெயர் கிடைத்துவிடுமோ என்று சிலருக்கு வயிற்றெரிச்சல் என்று கூறி குமாரசாமி கோபத்தை வெளிப்படுத்தினார். பட்ஜெட் தாக்கல் செய்வதில் கூட்டணி கட்சிக்குள் பிரச்சினை எழுந்துள்ளது.

இந்த நிலையில் பட்ஜெட் தயாரிப்பு கூட்டத்தை நடத்துவதற்கான கால அட்டவணையை முதல்-மந்திரி குமாரசாமி அறிவித்துள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தை அவர் 9 நாட்கள் நடத்துகிறார். இதுகுறித்து மாநில அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

பட்ஜெட் தயாரிப்பு தொடர்பாக துறை வாரியாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி வருகிற 21-ந் தேதி சுகாதாரம் மற்றும் குடும்ப நலன், மருத்துவ கல்வி, நீர்ப்பாசனம், சிறிய நீர்ப்பாசனம், பள்ளி கல்வி, வருவாய், தொழிலாளர் நலன், வேலை வாய்ப்பு, தொழிற்பயிற்சி ஆகிய துறைகளின் அதிகாரிகளின் மந்திரிகள் மற்றும் அதிகாரிகளுடன் குமாரசாமி கலந்து ஆலோசனை நடத்துகிறார்.

22-ந் தேதி சமூக நலன், பிற்படுத்தப்பட்டோர் நலன், கன்னட கலாசாரம் மற்றும் பெண்கள், குழந்தைகள் நலன், 23-ந் தேதி விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள், 25-ந் தேதி விவசாயம், கால்நடை வளர்ச்சி, மீன்வளம், தோட்டக்கலை, பட்டு வளர்ச்சி, சுற்றுலா, போலீஸ், பெங்களூரு நகர வளர்ச்சி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை மந்திரிகள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்படுகிறது.

26-ந் தேதி தொழில், தகவல் தொழில்நுட்பம், அறிவியல் தொழில்நுட்பம், கூட்டுறவு, கிராம வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ், சட்டம், நகரசபை நிர்வாகம், துறைமுகத்துறை மந்திரிகள் மற்றும் அதிகாரிகளுடன் குமாரசாமி கலந்து ஆலோசனை நடத்துகிறார். 27-ந் தேதி பொதுப்பணி, போக்குவரத்து, மின்சாரம், உயர்கல்வி, அடிப்படை கட்டமைப்பு, விவசாய சந்தை, பொதுத்துறை நிறுவனங்கள், நகர வளர்ச்சி, வீட்டு வசதி ஆலோசனை கூட்டம் நடக்கிறது.

28-ந் தேதி கனிம வளம் மற்றும் நில அறிவியல், வருவாய், திட்டம் மற்றும் புள்ளியல், செய்தி மற்றும் மக்கள் தொடர்பு, ஜவுளி, உணவு மற்றும் பொது விநியோகம், சிறுபான்மையினர் நலன், ஹஜ், வனம் மற்றும் சுற்றுச்சூழல், 29-ந் தேதி வணிக சங்கங்கள், போக்குவரத்து சங்கங்கள், கலால் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடக்கிறது. 30-ந் தேதி வணிக வரிகள், கலால், அச்சு மற்றும் பதிவு, அரசு ஊழியர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்