திருச்சி மாவட்டத்தில் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருகிறாரா?

திருச்சி மாவட்டத்தில் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. ஒருவர் மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருவதாக முன்னாள் எம்.எல்.ஏ பேசியுள்ள செல்போன் உரையாடல் ‘வாட்ஸ்-அப்’பில் வைரலாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2018-06-17 22:14 GMT
திருச்சி,

திருச்சி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஒருவரும், அ.தி.மு.க.வின் முன்னாள் நிர்வாகியும், தற்போது விவசாயிகள் சங்கத்தில் மாநில பொறுப்பில் உள்ள ஒருவரும் பேசிய செல்போன் உரையாடல் தற்போது வாட்ஸ்-அப்பில் வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற் படுத்தியுள்ளது.

அதில் பேசிய முன்னாள் எம்.எல்.ஏ., தற்போதுள்ள அ.தி.மு.க. நிர்வாகி ஒருவரை சரமாரியாக தாக்கி பேசி உள்ளார். அதில் அந்த நிர்வாகி தமிழகத்தின் 2-ம் நிலையில் உள்ள அமைச்சர் மற்றும் திருச்சி மாவட்டத்தில் உயர்ந்த பதவியில் உள்ள அதிகாரியை வைத்து 7 வீடுகளை கேட்டு வாங்கி உள்ளதாகவும், அதை தற்போதைய ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. மற்றும் அ.தி.மு.க. நிர்வாகி இருவரும் சேர்ந்து அந்த உயர் அதிகாரியிடம் பேசி மாற்றிவிட்டதாகவும் கூறியுள்ளார்.

மேலும் தற்போதைய ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. மற்றும் அ.தி.மு.க. நிர்வாகி ஆகிய இருவரும் சேர்ந்து அந்த எம்.எல்.ஏ.வின் தொகுதியில் பல்வேறு திட்டங்கள் மூலம் ரூ.1,000 கோடி கொள்ளையடித்து விட்டதாகவும், மணல் கொள்ளையிலும் மும்முரம் காட்டுவதாகவும் பேசியுள்ளார். மேலும் இதற்கு வருவாய்த்துறை அதிகாரி ஒருவர் உடந்தையாக இருப்பதாகவும், அவருக்கு ரூ.1 லட்சம் மற்றும் வெள்ளி குத்துவிளக்கு ஆகியவை கொடுத்து சரிகட்டி விட்டதாகவும் முன்னாள் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.

இதுமட்டுமின்றி அரசு உயர் அதிகாரியை, அ.தி.மு.க. நிர்வாகி ஒருமையில் கடுமையாக சாடிபேசுவதும், இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் உயர் அதி காரியே நேரில் விசாரித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் ஆவேசமாக பேசப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு விஷயங்கள் அந்த ஆடியோவில் உள்ளது. இந்த ஆடியோ உரையாடல் வாட்ஸ்-அப்பில் வைரலாக பரவி வருகிறது. மேலும் இந்த ஆடியோவானது அதிகாரிகளின் கவனத்திற்கும் சென்றுள்ளது. ஆனால் இதுபற்றி யாரும் புகார் தெரிவிக்கவில்லை. இருப்பினும் வாட்ஸ்-அப் உரையாடல் குறித்து விசாரித்து வருகிறார்கள்.

ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. மற்றும் அ.தி.மு.க. பிரமுகர் மட்டுமின்றி, மாவட்ட உயர் பதவியில் உள்ள அதிகாரி, வருவாய்த்துறை அதிகாரி மீதும் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. குற்றம்சாட்டி பேசி இருப்பது திருச்சி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்