ரத்தினகிரீசுவரர் கோவிலில் ரோப்கார் அமைக்கும் பணி தீவிரம்

குளித்தலை அருகே உள்ள அய்யர்மலை ரத்தினகிரீசுவரர் கோவிலில் ரோப்கார் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2018-06-17 22:05 GMT
குளித்தலை,

குளித்தலையில் இருந்து மணப்பாறை செல்லும் வழியில் குளித்தலையில் இருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது அய்யர்மலை. இந்த ஊரில் மிகவும் புகழ்பெற்ற மற்றும் பாடல் பெற்ற சிவத்தலமான ரத்தினகிரீசுவரர் கோவில் உள்ளது. மலைமேல் அமைந்துள்ள இக்கோவில் சுமார் 4 கிலோ மீட்டர் சுற்றளவும், கடல் மட்டத்தில் இருந்து 1,178 அடிகள் உயரத்திலும் உள்ளது. மலை உச்சிக்கு செல்ல 1,017 படிகள் உள்ளன. இக்கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. இத்திருவிழாக்களில் தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் இங்கு வந்து இப்படிகளில் ஏறி மலை உச்சிக்கு சென்று சாமியை வழிபடுவார்கள். மேலும் நாள்தோறும் இக்கோவிலுக்கு நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் சிறிய குழந்தைகள், முதியோர்கள் படிகளில் ஏறி மலை உச்சிக்கு செல்ல மிகவும் சிரமப்பட்டு வந்தனர். ஆகவே இங்கு ரோப்கார் அமைக்கவேண்டும் என இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து கடந்த 2011-ம் ஆண்டு இத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இதன் பின்னர் பல்வேறு துறை வல்லுநர்கள் இங்கு ரோப்கார் அமைப்பதற்காக காற்றின் வேகத்தை அளவிடுதல், பாறைகளின் உறுதித்தன்மை, திருவிழாக்கள் மற்றும் தினந்தோறும் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு செய்து வந்தனர்.

ரூ.6 கோடியே 70 லட்சம் இத்திட்டத்திற்கான செலவு தொகையாக நிர்ணயம் செய்யப்பட்டது. ரோப்கார் திட்டத்திற்காக பொதுமக்கள் மூலம் தற்போது வரை சுமார் ரூ.3 கோடிக்கு மேல் நன்கொடையாக பெறப்பட்டு வங்கியில் வைக்கப்பட்டுள்ளது. பற்றாக்குறையாக உள்ள தொகை இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பல கோவில்களில் இருந்து பெறப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் ரோப்கார் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை போடப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது மலையின் அடிவாரத்தில் ரோப்காரை இயக்குவதற்கான எந்திரங்கள் பொருத்தவும், பொதுமக்கள் ரோப்காரில் ஏறவும் மற்றும் அலுவலக பணிக்காக கட்டிடம் கட்டும் பணிகளில் 80 சதவீதம் முடிவடைந்துள்ளது. தற்போது மலை உச்சியில் கட்டிடம் கட்டுவதற்கான அடிதள கான்கிரீட் போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கான பொருட்கள் அனைத்தும் மலை அடிவாரத்தில் இருந்து மலை உச்சிக்கு ரோப்கார் இயக்கப்படுவது போன்ற அமைப்பில் கம்பிகள் வழியாக கொண்டு செல்லப்படுகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் ரோப்கார் அமைக்கும் பணிகள் முற்றிலும் முடிவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்