காஞ்சீபுரம் விரைவு கோர்ட்டில் திடீர் தீ விபத்து

காஞ்சீபுரம் தாலுகா அலுவலக வளாகத்தில் ஒருங்கிணைந்த கோர்ட்டு உள்ளது. இந்த கோர்ட்டு வளாகத்தில், காஞ்சீபுரம் விரைவு கோர்ட்டு உள்ளது. இந்த விரைவு கோர்ட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

Update: 2018-06-17 21:52 GMT
காஞ்சீபுரம்,

உடனடியாக கோர்ட்டு ஊழியர்கள் காஞ்சீபுரத்தில் உள்ள தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். மாவட்ட தீயணைப்புத்துறை அதிகாரி சையதுமுகமதுஷா உத்தரவின் பேரில், உதவி மாவட்ட அதிகாரி அப்துல்பாரி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, தண்ணீரை பீய்ச்சி அடித்து மற்ற இடங்களில் தீ பரவாமல் தடுத்தனர்.

அப்படி இருந்தும் மேசை, இன்வெட்டர், கணினி, ஆவணங்கள் போன்றவை தீயில் கருகின. தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்றதால், பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது. மின்கசிவு காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிகிறது.

தீ விபத்து குறித்து தகவல் அறிந்த சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ராஜா சென்னையில் இருந்து கார் மூலம், காஞ்சீபுரத்தில் உள்ள விரைவு கோர்ட்டுக்கு சென்றார். அங்கு தீ விபத்தில் சேதம் அடைந்தவற்றை பார்வையிட்டார்

பின்னர் அங்கு இருந்த பணியாளர்களிடமும் தீவிபத்து குறித்து நீதிபதி விசாரணை நடத்தினார்.

மேலும், காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ்ஹதிமானி, சென்னை பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் மனோகரன், காஞ்சீபுரம் தீயணைப்புத்துறை நிலைய அதிகாரி கன்னியப்பன் மற்றும் கோர்ட்டு நீதிபதிகளிடம் தீ விபத்து குறித்து கேட்டறிந்தார். மற்ற கோர்ட்டுகளில் எதாவது பழுது உள்ளதா? என்பதை பார்வையிட கோர்ட்டு ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

காஞ்சீபுரம் விரைவு கோர்ட்டில் நடந்த தீவிபத்து குறித்து சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ராஜா, தலைமை நீதிபதிக்கு அறிக்கை அனுப்பி வைத்தார். சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ராஜா காஞ்சீபுரம் கோர்ட்டுக்கு வந்தபோது, காஞ்சீபுரம் கோர்ட்டு நீதிபதிகள், கோர்ட்டு ஊழியர்கள் அனைவரும் வந்திருந்தனர்.

மேலும் செய்திகள்