சென்னை-சேலம் இடையேயான பசுமை வழிச்சாலை திட்டத்தினை கைவிட வேண்டும்

சென்னை-சேலம் பசுமை வழிச்சாலை திட்டத்தினை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் ஆலோசனைக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Update: 2018-06-17 23:30 GMT
சென்னை,

தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு இருந்த நடிகை நக்மா கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். அவருக்கு பதிலாக, தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளராக, தேசிய செயலாளர் பாத்திமா ரோஸ்னா சமீபத்தில் நியமிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கு பாத்திமா ரோஸ்னா நேற்று வந்தார். அவருக்கு மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அதனை தொடர்ந்து, தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டத்தில் அவர் பங்கேற்றார். இந்த கூட்டத்திற்கு மகளிர் காங்கிரஸ் மாநிலத்தலைவி ஜான்சிராணி தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. யசோதா, மாநில துணைத்தலைவர் அருள் மீனாட்சி, பொதுச்செயலாளர்கள் கோவை கவிதா, சாரதா, ரேவதி ஷகிலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, மகளிர் அணி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார். இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு.

*பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுத்து நிறுத்த குற்றவாளிகளுக்கு உடனடி தண்டனை வழங்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் சட்டம் நிறைவேற்ற வேண்டும்.

*நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்து, பிளஸ்-2 மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை நடத்த வேண்டும்.

*மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் வேலை நாட்களை 150 நாட்களில் இருந்து ஆண்டு முழுவதும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

*மறைமுகமாக பள்ளிகளை மூடும் நடவடிக்கையை தமிழக அரசு கைவிட வேண்டும். மேலும் அரசு பள்ளிகளில் கல்வி தரத்தை உயர்த்த தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

*சட்டமன்றம்-நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

*பெட்ரோலிய பொருட் களை ஜி.எஸ்.டி. வரிக்குள் கொண்டு வர வேண்டும், மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் சென்னை- சேலம் பசுமை வழிச்சாலை திட்டத்தினை அரசு கைவிட வேண்டும்.

உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் செய்திகள்