பெயிண்டர் வெட்டிக்கொலை 10 பேரிடம் போலீஸ் விசாரணை

திருமுல்லைவாயலில் பெயிண்டர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 10 பேரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Update: 2018-06-17 20:58 GMT
ஆவடி,

திருமுல்லைவாயல் புதிய அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் ராம்பாபு. இவருடைய மகன் சிரஞ்சீவி(வயது 25). பெயிண்டர். நேற்று முன்தினம் மாலை வேலை முடிந்து வீட்டுக்கு வந்த சிரஞ்சீவி, பின்னர் தனது நண்பர்களை பார்த்துவிட்டு வருவதாக கூறி விட்டு சென்றார்.

ஆனால் அதன்பிறகு அவர் வீடு திரும்பி வரவில்லை. இதையடுத்து அவருடைய தம்பி சிவக்குமார், அண்ணனை தேடிச்சென்றார். அப்போது அவர்களது வீட்டின் அருகே சாலையோரத்தில் சிரஞ்சீவி படுகொலை செய்யப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

அவரது தலை, கை உள்ளிட்ட இடங்களில் பலத்த வெட்டுக்காயம் காணப்பட்டது. மர்மநபர்கள் அவரை, சரமாரியாக வெட்டிக்கொலை செய்து உள்ளனர்.

அண்ணன் பிணமாக கிடப்பதை கண்டு அலறிய சிவக்குமாரின் அலறல் சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். இதுபற்றி தகவல் அறிந்து வந்த திருமுல்லைவாயல் போலீசார், கொலையான சிரஞ்சீவி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், கொலையான சிரஞ்சீவிக்கும், அம்பத்தூர் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கள்ளக்காதல் இருந்து வந்ததாகவும், மேலும் ரெயிலில் பழ வியாபாரம் செய்யும் மற்றொரு பெண்ணுடனும் சிரஞ்சீவி கள்ளத்தொடர்பு வைத்து இருந்ததாகவும் கூறப்படுகிறது.

எனவே இந்த கள்ளக்காதல் சம்பவங்கள் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் யாராவது சிரஞ்சீவியை வெட்டிக்கொலை செய்தனரா? அல்லது நண்பர்களுடன் ஏற்பட்ட தகராறில் அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் இந்த கொலை தொடர்பாக சிரஞ்சீவியின் நண்பர்கள் உள்பட 10 பேரிடம் திருமுல்லைவாயல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்