பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டம்
பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் நூதன போராட்டம் நடத்தினார்கள்.
திருப்பூர்,
பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வுக்கு இந்தியா முழுவதும் உள்ள கட்சியினர், பல்வேறு அமைப்பினர் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் திருப்பூர் கருவம்பாளையம் கிளை சார்பில் வெடத்தலங்காடு பகுதியில் நேற்று நூதன போராட்டம் நடந்தது.
போராட்டத்துக்கு கட்சியின் கிளை செயலாளர் திருமூர்த்தி தலைமை தாங்கினார். மாநில கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் காளியப்பன், மாவட்ட செயலாளர் ரவி ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து பேசினார்கள். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், பெட்ரோல், டீசல் வாகனங்கள் ஓட்டுவதை விடுத்து மாட்டுவண்டியில் தான் பயணம் செய்ய வேண்டும் என்பதை குறிக்கும் வகையில், இருசக்கர வாகனத்தை மாட்டு வண்டியில் ஏற்றிக்கொண்டு வந்திருந்தனர்.
மேலும், கியாஸ் விலை எட்டாத உயரத்தில் இருக்கிறது என்பதை குறிக்கு வகையில், உயரமான பகுதியில் கியாஸ் சிலிண்டரை வைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும், உடனடியாக பெட்ரோல், டீசல், கியாஸ் விலையை திரும்ப பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மாநகராட்சி பகுதிகளில் உள்ள குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.
மேலும், தட்டான் தோட்டம் அருகே பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள மின்மயானம் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.