60 லட்சம் செல்லாத ரூபாய் நோட்டுகள் பறிமுதல்: கார் டிரைவர் உள்பட 3 பேர் கைது

கோவையில் 60 லட்சம் செல்லாத ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் கார் டிரைவர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-06-17 22:15 GMT

கோவை,

கோவை பீளமேட்டில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நாமக்கல்லை சேர்ந்த தஸ்தகீர் உள்பட சிலர் கடந்த 5–ந் தேதி வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தனர். அவர்கள் காரில் அடிக்கடி வெளியே சென்று வந்தனர். இதனால் சந்தேகம் அடைந்த அந்த குடியிருப்பின் காவலாளி போலீசுக்கு தகவல் தெரி வித்தார். அதன்பேரில் பீளமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் குடியிருப்புக்கு சென்று சோதனை நடத்தினார்கள்.

அப்போது அங்கு 60 லட்சம் செல்லாத ஆயிரம் ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக பதுக்கி வைக்கப் பட்டிருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக கோவை ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த செந்தில்குமார்(வயது 35), பிரசன்னா(32), ரங்கராஜ்(35), பெரியகடை வீதியை சேர்ந்த கிருஷ்ணகுமார், மகாலிங்கம், நட்டார் ராமன், காரமடையை சேர்ந்த பிரகாஷ் ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த கும்பலின் தலைவன் தஸ்தகீர் உள்பட சிலரை போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் நாமக்கல்லை சேர்ந்த மணிகண்டன்(22), ஷேக் சல்மான்(20), பாஸ்கர்(25) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களில் பாஸ்கர் கார் டிரைவர் ஆவார். அவரிடம் விசாரித்த போது தஸ்தகீர் தனது உறவினர் ஒருவருக்கு திருமணம் நடைபெற உள்ளது. அதற்காக பத்திரிகை கொடுக்க வேண்டும் என்று கூறி எனது காரை வாடகைக்கு கேட்டு வந்தார். அவர் கூறியதின்பேரில் பல்வேறு இடங்களுக்கு சென்றதை போல கோவைக்கும் கார் ஓட்டி வந்தேன் என்று தெரிவித்தார்.

மணிகண்டன் மற்றும் ஷேக் சல்மான் ஆகியோரிடம் விசாரித்த போது பீளமேடு அடுக்குமாடி குடியிருப்பில் செல்லாத ரூபாய் நோட்டுகள் மறைத்து வைத்தது தங்களுக்கு தெரியாது என்றும் தஸ்தகீர் அழைத்ததின் பேரில் தான் வந்தோம் என்று கூறினார்கள். ஆனாலும் அவர்கள் கூறுவது உண்மைதானா, செல்லாத ரூபாய் நோட்டுகள் மறைத்து வைக்கப்பட்டதில் அவர்களுக்கு தொடர்பு இருக்குமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் கும்பல் தலைவன் தஸ்தகீரை பிடித்தால் தான் உண்மை விவரம் தெரியும்.

செல்லாத ரூபாய் நோட்டுகளை வைத்திருந்தது தொடர்பாக கைது செய்யப்பட்ட 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின.

இது குறித்து பீளமேடு போலீசார் கூறியதாவது:–

கைது செய்யப்பட்ட 3 பேரும் செல்லாத ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வைத்து பலரை ஏமாற்றி உள்ளனர். செல்லாத 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை வைத்திருந்தாலே தண்டனைக்குரிய குற்றமாகும். எனவே மாற்ற முடியாத ரூபாய் நோட்டுகளை சிலர் பதுக்கி வைத்துள்ளனர். அவற்றை இந்த மோசடி கும்பல் தற்போது புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகளை கொடுத்து மாற்றியுள்ளனர். அதன்படி தான் 60 லட்சம் செல்லாத ரூபாய் நோட்டுகளை தற்போது புழக்கத்தில் உள்ள 10 லட்சம் ரூபாய் கொடுத்து யாரிடமோ வாங்கி வந்துள்ளனர். அவற்றை கொடுத்தது யார் என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

செல்லாத ரூபாய் நோட்டுகளை மோசடி ஆசாமிகள் 2 நோக்கத்துக்காக பயன்படுத்துகிறார்கள். ஒன்று செல்லாத ரூபாய் நோட்டுகளை சில இடங்களில் மாற்றுகிறார்கள். அங்கு சென்றால் மாற்றிக் கொள்ளலாம். அதனால் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள செல்லாத ரூபாய் நோட்டுகளுக்கு பதில் தற்போது புழக்கத்தில் உள்ள 20 அல்லது 30 லட்சம் ரூபாய்க்கு மாற்றி விடுகிறார்கள். செல்லாத ரூபாய் நோட்டுகள் பற்றி போதிய விழிப்புணர்வு இல்லாத நபர்களை குறி வைத்து மோசடி ஆசாமிகள் கைவரிசை காட்டுகிறார்கள்.

இரண்டாவதாக, ரூபாய் நோட்டு இரட்டிப்பு மோசடிக்கு செல்லாத ரூபாய் நோட்டுகளை மோசடி பேர்வழிகள் பயன்படுத்துகிறார்கள். தற்போது புழக்கத்தில் உள்ள ஒரு லட்சம் ரூபாய் நோட்டுகளுக்குபதில் 5 லட்சம் ரூபாய்க்கு கள்ள நோட்டுகள் தருகிறோம் என்று கூறி மோசடி ஆசாமிகள் மற்றொரு கும்பலை ஒரு இடத்துக்கு வர சொல்வார்கள். அவர்கள் வந்து பணத்தை மாற்றும் போது திடீரென்று போலீசார் வந்து விட்டனர் என்று கூறி செல்லாத ரூபாய் நோட்டுகள் மற்றும் தற்போது புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகளை சுருட்டிக் கொண்டு சென்று விடுகிறார்கள்.

தற்போது புழக்கத்தில் உள்ள ரூ.10 லட்சம் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை கொடுத்து செல்லாத ரூபாய் நோட்டுகளை வாங்கியிருக்கிறார்கள் என்றால் ஏமாற்றும் நோக்கத்துடன் மோசடி ஆசாமிகள் செயல்பட்டு உள்ளனர் தெரியவந்து உள்ளது.

இவ்வாறு போலீசார் கூறினார்கள்.

மேலும் செய்திகள்