உயிரிழந்த கிருஷ்ணசாமி குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிதி உதவி - அ.தி.மு.க. சார்பில் வழங்கப்பட்டது

நீட்தேர்வு எழுத மகனை கேரளாவுக்கு அழைத்து சென்று உயிரிழந்த கிருஷ்ணசாமி குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிதி உதவி அ.தி.மு.க. சார்பில் வழங்கப்பட்டது.;

Update: 2018-06-17 23:15 GMT
திருத்துறைப்பூண்டி,

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள விளக்குடி மேலத்தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (வயது47). இவர் பெருகவாழ்ந்தான் நூலகத்தில் அலுவலராக வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி பாரதிமகாதேவி(40). இவர் ராயநல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு கஸ்தூரி மகாலிங்கம் என்ற மகனும், ஐஸ்வர்யா மகாதேவி என்ற மகளும் உள்ளனர். பிளஸ்-2 முடித்த தன் மகன் கஸ்தூரி மகாலிங்கத்தை நீட் தேர்வு எழுதுவதற்காக கேரளா அழைத்து சென்றபோது அங்கே மாரடைப்பால் கிருஷ்ணசாமி மரணமடைந்தார்.

இது நீட் தேர்வுக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராடிய மக்களுக்கு மேலும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் உயிரிழந்த கிருஷ்ணசாமியின் குடும்பத்துக்கு தமிழக அரசு சார்பில் ரூ.3 லட்சம் வழங்கப்பட்டது. இந்த நிலையில் விளங்குடியில் உள்ள கிருஷ்ணசாமி வீட்டுக்கு வந்த உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ், கிருஷ்ணசாமி மனைவி மற்றும் மகன், மகளுக்கு ஆறுதல் கூறினார். மேலும் அ.தி.மு.க. சார்பில் ரூ.2 லட்சம் நிதியை வழங்கியதோடு மாணவன் கஸ்தூரி மகாலிங்கத்தின் படிப்பு செலவையும் அரசே ஏற்கும் என உறுதி அளித்தார்.

பின்னர் அமைச்சர் ஆர்.காமராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-

வரும் ஆண்டுகளில் நீட் தேர்வை தமிழக மாணவர்கள் தமிழகத்தில் எழுத மத்திய அரசை, மாநில அரசு வலியுறுத்தும். கர்நாடக அணைகளில் இருந்து மேட்டூர் அணைக்கு வந்து சேரும் தண்ணீரின் அளவை பொறுத்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும்.

நீட் தேர்வுக்கான பயிற்சியை அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கும் அளிக்க உரிய ஏற்பாடுகள் முழுமூச்சில் நடைபெற்று வருகிறது. மேலும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்