விருதுநகரில் ஜாமீனில் வந்த வாலிபர் வெட்டிக்கொலை காண்டிராக்டருக்கு வலைவீச்சு

விருதுநகரில் ஜாமீனில் வந்த வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

Update: 2018-06-17 23:00 GMT

விருதுநகர்.

விருதுநகர் அல்லம்பட்டியை சேர்ந்தவர் சுந்தரராஜ். கட்டிட காண்டிராக்டரான இவரது முதல் மனைவியின் மகன் செல்லப்பாண்டி(வயது 19). சுந்தரராஜ் தற்போது இரண்டாவது மனைவியுடன் இருந்து வருகிறார். செல்லப்பாண்டியின் நண்பர் அல்லம்பட்டியை சேர்ந்த மைதீன் பாட்ஷா(24). இவர் டிப்ளமோ என்ஜினீயர். கடந்த மாதம் 21–ந் தேதி செல்லப்பாண்டி, மைதீன் பாட்ஷாவுடன் தனது தந்தை சுந்தரராஜின் வீட்டிற்கு சென்று சொத்தை பிரித்து கொடுக்கும் படி கேட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் இருவரும் தன்னை தாக்கியதாக சுந்தரராஜ் விருதுநகர் கிழக்கு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்லப்பாண்டியையும் மைதீன் பாட்ஷாவையும் கைது செய்தனர். தற்போது இருவரும் ஜாமீனில் உள்ளனர்.

இந்த நிலையில் மைதீன் பாட்ஷா அல்லம்பட்டி காமராஜர் சாலையில் தனது நண்பர் அஜய்யுடன் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த சுந்தரராஜ் மைதீன் பாட்ஷாவை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிவிட்டார். வெட்டுபட்ட மைதீன் பாட்ஷா அந்த இடத்திலேயே விழுந்து பரிதாபமாக இறந்தார். விருதுநகர் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து காண்டிராக்டர் சுந்தரராஜை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்