குடிநீர் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கலெக்டரிடம், தி.மு.க. எம்.எல்.ஏ. கோரிக்கை மனு

தர்மபுரி சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் மலர்விழியிடம் தி.மு.க. எம்.எல்.ஏ. தடங்கம் சுப்ரமணி கோரிக்கை மனு அளித்துள்ளார்.

Update: 2018-06-17 23:15 GMT

தர்மபுரி,

தர்மபுரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிராமப்புறங்களில் தொகுதி எம்.எல்.ஏ.வும், தி.மு.க. மாவட்ட செயலாளருமான தடங்கம் சுப்ரமணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களை நேரில் சந்தித்து குறைகேட்கும் கூட்டங்களை நடத்தி வருகிறார். நல்லம்பள்ளி, தர்மபுரி ஒன்றியத்திற்குட்பட்ட 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.

இந்த கூட்டங்களில் பெரும்பாலான கிராமங்களில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர், சாக்கடை கால்வாய், தெரு விளக்கு, புதிய தார்சாலை, முதியோர் உதவித்தொகை, மயான வசதி உள்ளிட்ட 1,000-த்திற்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்கள் எம்.எல்.ஏ.விடம் பொதுமக்கள் அளித்தனர். இந்த மனுக்களை துறைவாரியாக பிரித்து கலெக்டரிடம் வழங்க முடிவு செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களை தி.மு.க. மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்ரமணி எம்.எல்.ஏ. தர்மபுரி மாவட்ட கலெக்டர் மலர்விழியை நேரில் சந்தித்து வழங்கினார். தொகுதி மக்களின் இந்த கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றி தர வேண்டும். குறிப்பாக கிராமப்புறங்களில் நிலவும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எம்.எல்.ஏ. கலெக்டரிடம் வலியுறுத்தினார்.

இந்த மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு இந்த மனுக்கள் அனுப்பப்பட்டு 15 நாட்களுக்குள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். அப்போது தி.மு.க. முன்னாள் ஒன்றிய செயலாளர் துரைசாமி, இளைஞர் அணி நிர்வாகி நடராஜன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்