குன்னூர்– மேட்டுப்பாளையம் சாலையில் காட்டுயானைகள் நடமாட்டம்; வாகன ஓட்டிகள் பீதி

குன்னூர்– மேட்டுப்பாளையம் சாலையில் காட்டுயானைகள் நடமாடி வருவதால், வாகன ஓட்டிகள் பீதியில் உள்ளனர்.

Update: 2018-06-17 22:30 GMT

குன்னூர்,

குன்னூர்– மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள பலா மரங்களில் தற்போது பலா பழ சீசன் உள்ளது. பலா பழங்கள் என்றால் யானைகளுக்கு பிடித்தமான உணவு. பலா பழங்களை சுவைக்க குன்னூர் வனச்சரகத்தின் எல்லைக்கு அருகில் உள்ள வனப்பகுதியில் இருந்து காட்டுயானைகள் வருகின்றன. இந்த யானைகள் தண்ணீர் மற்றும் உணவுக்காக அடிக்கடி குன்னூர்– மேட்டுப்பாளையம் சாலையை கடக்கின்றன. இதனால் வாகன போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படும் நிலை உள்ளது. தற்போது 4 காட்டுயானைகள் குன்னூர்– மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள பர்லியார் மற்றும் கே.என்.ஆர்.நகர் இடையே உள்ள சாலையின் மேற்புறத்தில் முகாமிட்டுள்ளன.

இந்த 4 காட்டுயானைகளும் அவ்வப்போது சாலையிலும் உலா வந்து, வாகன ஓட்டிகளுக்கு பீதியை ஏற்படுத்துகின்றன. மேலும் சில சுற்றுலா பயணிகள் காட்டுயானைகளை தங்களது செல்போனில் புகைப்படம் எடுக்க முற்படுகின்றனர். இதனால் அவை மிரண்டு வாகனங்களையும், செல்போனில் புகைப்படம் எடுப்பவர்களையும் தாக்கும் அபாயம் உள்ளது. எனவே சுற்றுலா பயணிகள் காட்டுயானைகளை பார்த்தால் புகைப்படம் எடுப்பது, அவைகளை தொந்தரவு செய்வது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்