குடிநீர் வினியோகம் செய்யாததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம்

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா திம்மூர் கிராமத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். குடிநீர் வினியோகம் செய்யாததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.;

Update:2018-06-18 04:00 IST
குன்னம், 

இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக அப்பகுதியில் இடி, மின்னலுடன் மழை பெய்ததில் மின்மாற்றி பழுதாகி விட்டது. அதனை சரி செய்யாமல் மற்றொரு மின்மாற்றியில் இருந்து மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் குறைந்த அழுத்தத்தில் மின்சாரம் வினியோகிக்கப்பட்டு வந்ததால் மின்சாதன பொருட்கள் அடிக் கடி பழுதானது. குறைந்த அழுத்த மின்சாரம் காரணமாக குடிநீர் தொட்டியின் மின்மோட்டாரை இயக்க முடியவில்லை. இதனால் ஒரு மாதமாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இது சம்பந்தமாக பல முறை கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த பொது மக்கள் 200-க்கும் மேற்பட்டோர் ஆலத்தூர் கேட் அரியலூர் சாலையில் காலிக் குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்டீபன் அந்தோணிசாமி, குன்னம் போலீசார் மற்றும் மின்வாரியத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் இன்னும் 3 தினங்களுக்குள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக சுமார் 5 மணி நேரம் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்