பளிங்காநத்தம் கிராமத்தில் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

பளிங்காநத்தம் கிராமத்தில் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Update: 2018-06-17 22:15 GMT
திருமானூர்,

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் பளிங்காநத்தம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் சிதிலம் அடைந்து காணப்பட்டது. இதனையடுத்து கிராம மக்கள் ஒன்று கூடி கோவிலை புதிதாக கட்டுவது என முடிவெடுத்து பாலாலய பணிகளை செய்து வந்தனர். இங்கு மாரியம்மன், மகா விஷ்ணு, அன்னகாமாட்சி, மாசி பெரியண்ணசாமி, மருதையான், வீரஆஞ்சநேயர், வலம்புரி விநாயகர் உள்ளிட்ட 12 சாமி சன்னதிகள் கட்டப்பட்டு ராஜகோபுரம், விமானகலசங்கள், கொடிமரம் அமைக்கப்பட்டது.

இந்த பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து கும்பாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டு கடந்த 15-ந்தேதி விக்னேஷ்வர பூஜையுடன் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் தொடங்கியது. தொடர்ந்து சவுபாக்கிய லட்சுமி ஹோமம், மாலை 5 மணி அளவில் வாஸ்து சாந்தி பூஜை, முதல்கால யாக பூஜை நடைபெற்றது.

நேற்று முன்தினம் காலை 8 மணி அளவில் திரவிய ஹோமம், மகா தீபஆராதனை, மாலை 5.30 மணிக்கு 2-ம் கால பூஜை, தொடர்ந்து 3-ம் கால யாக பூஜை, வடுக பூஜை, கன்யாபூஜை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. விழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக காலை 4 மணிக்கு 4-ம் கால யாக பூஜை மற்றும் 96 வகை திரவிய ஹோமம், மருந்து சாற்றுதல், நாடிசந்தனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

பின்னர் காலை 6 மணியிலிருந்து 7.30 மணிக்குள் வலம்புரி விநாயகர், ஏரிகரை ஸ்ரீசங்கிலிகருப்பு, சப்பாணிகருப்பு ஆலய விமான கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டது. தொடர்ந்து 8 மணியளவில் கஜ அசுவ ரிஷப சர்ப்ப பூஜைகள் செய்து யாத்ரா தானம் கடம் புறப்பாடு நடைபெற்றது. தொடர்ந்து 10.40 மணிக்கு மேல் மாரியம்மன் உள்ளிட்ட அனைத்து விமான கலசங்களுக்கும் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்று தீர்த்த பிரசாதம் வழங்கபட்டது.

விழாவில் விளாகம், எசனை, இலந்தகுடம், சன்னாவூர், வெங்கனூர், ஆலம்பாடி, புதூர்பாளையம், கல்லக்குடி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்