பண்ருட்டி அருகே தொழிலாளி கொலை செய்யப்பட்டது எப்படி? போலீசில் மனைவி பரபரப்பு புகார்
பண்ருட்டி அருகே தொழிலாளி கொலை செய்யப்பட்டது எப்படி? என்பது குறித்து அவரது மனைவி, போலீசில் பரபரப்பு புகார் கொடுத்துள்ளார்.
பண்ருட்டி,
பண்ருட்டி அருகே பலாப்பட்டு காலனியை சேர்ந்தவர் தேவராஜ் மகன் சதாசிவம் (வயது 40). தொழிலாளி. இவருடைய மனைவி விஜயலட்சுமி. இவர்களுக்கு 2 மகள்கள், 1 மகன் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு சதாசிவத்திற்கும், அவரது தம்பி தினேஷ்பாபுவிற்கும் தகராறு ஏற்பட்டது. இதில் சதாசிவம் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். தினேஷ்பாபு தப்பி ஓடிவிட்டார்.
இந்த சம்பவம் குறித்து விஜயலட்சுமி காடாம்புலியூர் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:–
தனது கணவர் சதாசிவத்திற்கு பல பெண்களோடு தவறான பழக்கம் உள்ளது. அதுமட்டுமின்றி அவருக்கு மது குடிக்கும் பழக்கமும் இருந்தது. 16–ந் தேதி இரவு மது குடித்து விட்டு சதாசிவம் வீட்டுக்கு வந்தார். அப்போது அவரிடம், பெண்களுடன் தவறான பழக்கம் குறித்தும், மது குடிப்பது குறித்தும் கேட்டேன். அப்போது அவர் என்னையும், எனது மாமனார் தேவராசுவையும் திட்டி தாக்கினார்.
இதை தினேஷ்பாபு தட்டிக்கேட்டார். இதனால் அவர்களுக்குள் கைகலப்பு ஏற்பட்டது. அப்போது தினேஷ்பாபு, கத்தியால் சதாசிவத்தின் கழுத்திலும், இடுப்பிலும் குத்தி கொலை செய்தார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
அந்த புகாரின் பேரில் காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரய்யா வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள தினேஷ்பாபுவை தேடி வருகிறார்.