செஞ்சி அருகே முயல் வேட்டையின் போது வாலிபரின் உடலில் குண்டு பாய்ந்தது 2 பேர் கைது

செஞ்சி அருகே முயல் வேட்டையின்போது நாட்டு துப்பாக்கியால் சுட்டதில் வாலிபரின் உடலில் குண்டு பாய்ந்தது. இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.

Update: 2018-06-17 22:30 GMT

செஞ்சி,

செஞ்சி அருகே பூரிமாக்குடிசை புதுமனை காலனி பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் மகன் முத்துக்குமார் (வயது 25). இவர் நேற்று காலை இயற்கை உபாதையை கழிப்பதற்காக அதே பகுதியில் உள்ள கரும்பு தோட்டத்திற்கு சென்றார்.

அப்போது அங்கு வந்த 2 வாலிபர்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த நாட்டு துப்பாக்கியால் காட்டு முயலை வேட்டையாடி கொண்டிருந்தனர்.

அந்த சமயத்தில் துப்பாக்கியில் இருந்து பாய்ந்த குண்டு, எதிர்பாராதவிதமாக முத்துக்குமாரின் உடலில் பாய்ந்தது. இதில் ரத்தம் சொட்ட, சொட்ட அவர் வலியால் அலறி துடித்தார். உடனே அங்கிருந்து 2 பேரும் தப்பியோட முயன்றனர்.

இந்த சத்தம் கேட்டதும் அக்கம், பக்கத்தில் இருந்த பொதுமக்கள் விரைந்து வந்து அந்த 2 வாலிபர்களையும் மடக்கிப்பிடித்தனர். பின்னர் முத்துக்குமாரை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

தொடர்ந்து, இதுகுறித்து கஞ்சனூர் போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், பிடிபட்ட அவர்கள் இருவரும், செஞ்சி ஜெ.ஜெ. நகரை சேர்ந்த நரிக்குறவர்களான கன்னியப்பன் மகன் தங்கராஜ் (35), பொன்னுசாமி மகன் ஏழுமலை (26) என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்கராஜ், ஏழுமலை ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்த நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.

இந்த சம்பவத்தினால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்