கவர்ச்சிப் போட்டியில் கலக்கும் பாட்டிகள்
இங்கிலாந்தைச் சேர்ந்த கேரி ஹில்டன் என்ற பெண்மணி, ‘உலகிலேயே கவர்ச்சிகரமான பாட்டி நான்தான்’ என்கிறார்.
இங்கிலாந்தைச் சேர்ந்த கேரி ஹில்டன் என்ற பெண்மணி, ‘உலகிலேயே கவர்ச்சிகரமான பாட்டி நான்தான்’ என்கிறார். அதற்கேற்ப, தனது அதிரடி கவர்ச்சிப் படங்களை இன்ஸ்டாகிராம் தளத்தில் தொடர்ந்து வெளியிட்டு புயல் கிளப்பி வருகிறார்.
இவருக்கு வயது 36 தான். 17 வயதாகும் தனது மகள் குழந்தை பெற்றதால், தான் மேற்கண்ட அந்தஸ்தைப் பெற்றுவிட்டதாக பெருமையோடு கூறுகிறார்.
‘‘இங்கிலாந்தின் மிகவும் கவர்ச்சிகரமான பாட்டி என்று கடந்த ஜனவரி மாதம் சமூக வலை தளங்களால் நான் அறிவிக்கப்பட்டேன். தற்போது, உலகின் மிகவும் இளமையான, கவர்ச்சியான பாட்டி என்று என்னை அறிவித்துவிட்டார்கள். அது உண்மைதான். உலகில் யாரும் எனக்கு போட்டியே கிடையாது’’ என்று மார்தட்டுகிறார், கேரி.
இங்கிலாந்தின் வடமேற்குப் பகுதியில் உள்ள பால்டன் நகரைச் சேர்ந்தவர், கேரி. ஊடக நிறு வனம் ஒன்றில் மேலாளராகப் பணிபுரிகிறார். கட்டுடலைப் பராமரிப்பதில் மிகுந்த ஆர்வமுள்ளவரான இவர், வாரத்தில் ஐந்து நாட்கள் தீவிர உடற் பயிற்சியில் ஈடுபடுகிறார். அத்துடன், அவ்வளவு ஒன்றும் வயதாகிவிடவில்லை என்றாலும், தனது அழகை மேம்படுத்திக்காட்டுவதற்காக முன்னழகைக் கூட்டும் அறுவைசிகிச்சை, பற்சீரமைப்பு, தலைமுடி, புருவங்கள், இமை முடிகளை சீர்திருத்தும் சிகிச்சை மற்றும் பிற அழகு சிகிச்சைகளை மேற்கொண்டிருக்கிறார்.
கேரியின் தோற்றத்தைப் பார்ப்பவர்கள் அவரை ஒரு கல்லூரி மாணவி என்றுதான் கருதுவார்கள். அதனால்தான், தான் ஒரு ‘பாட்டி’ என்று கூறும்போது மற்றவர்கள் அதிர்ச்சியடைந்து விடுகிறார்கள் என்கிறார்.
‘‘நான் உடற்பயிற்சிக்கூடத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருக்கும்போது அங்கு வரும் என் மகள் என்னை ‘அம்மா’ எனும்போது அங்குள்ளவர்கள் ஆச்சரியப்படுவார்கள். நானோ, ‘நான் இப்போது ஒரு பாட்டி’ என்பேன். அவர்கள் நம்பவே மாட்டார்கள்’’ என்று பெருமிதம் கலந்த புன்சிரிப்புடன் கூறுகிறார், கேரி.
‘‘நான் எப்போதும் ‘பிட்’டாகவும் சுறு சுறுப்பாகவும் இருப்பேன். வீட்டை விட்டு வெளியே செல்ல அதிகம் விரும்பமாட்டேன். எனது பெரும்பாலான நேரத்தைக் கழிப்பது உடற்பயிற்சியில்தான். ஆனால் வேண்டுமென்றே நான் ஒரு ‘பாட்டி’ என்று கூறுவதும் இல்லை. குறிப்பாக இளைஞர்களிடம் அப்படி அவசரப்பட்டு சொல்லி விடமாட்டேன்’’ என்கிறார்.
இன்ஸ்டாகிராமில் கேரி வெளியிடும் கவர்ச்சிப் படங்களை ரசிப்பதற்காகவே ஒரு பெருங்கூட்டம் இருக்கிறது. சுமார் 15 ஆயிரம் பேர் இவரை பின்தொடர்கிறார்கள்.
‘‘என்னை ரசிப்பவர்களிடம் இருந்து நிறைய மெசெஜ்கள் எனக்கு வரும். அவர்களில் பெரும்பாலானவர்கள் டேட்டிங் அல்லது ‘வேறு’ விஷயத்துக்கு அழைப்பார்கள். ‘என்னை மணந்துகொள்வீர்களா?’ என்று சிலர் கேட்பதும் உண்டு’’
இதற்கிடையில், ‘உலகிலேயே கவர்ச்சியான பாட்டி நான்தான்’ என்று கேரி ஹில்டனுக்கு போட்டி யாகக் கிளம்பியிருக்கிறார், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கினா ஸ்டீவர்ட். ஆனால் இவருக்கு வயது 47.
கினாவுக்கு இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள் என்று நான்கு வாரிசுகள். அவர்களில் மூத்தவருக்கு வயது 27. பதினோரு மாத பேரக் குழந்தை இருக்கிறது.
கேரியைப் போல தான் அழகுக்காக அதிகம் அலட்டிக்கொள்வதில்லை என்றும், தன்னுடைய இயற்கை அழகே தனக்குப் போதும் என்றும் கினா கூறுகிறார்.
அதேநேரம், ‘‘நான் செய்துகொண்ட ஒரே அழகுச் சிகிச்சை, 10 ஆண்டுகளுக்கு முன் எனது முன்னழகை எடுப்பாக்கிக் கொண்டதுதான். மற்றபடி வேறு எந்த பிளாஸ்டிக் சர்ஜரியும் நான் செய்துகொண்டதில்லை. அந்தந்த வயதுக்கான இயற்கை அழகே போதும் என்பது என் எண்ணம்’’ என்கிறார் கினா.
‘‘நான் தாது உப்புகள் நிறைந்த குடிநீரை மட்டுமே பருகுகிறேன். ‘ரோஷிப் ஆயில்’ எனப்படும் எண்ணெய்யைப் பயன்படுத்துவதும் என் அழகின் ரகசியம்’’ என்று சுறுசுறுப்பாக கூறுகிறார்.
கேரியைப் போல வயது தாண்டிய அதிரடி அழகின் காரணமாக பிரபல கவர்ச்சி மாடலாக திகழ்கிறார், கினா.
கேரியை இன்ஸ்டா கிராமில் 15 ஆயிரம் பேர் பின்தொடர்கிறார்கள் என்றால், கினாவை பின்தொடர்வோர் எண்ணிக்கை 75 ஆயிரம்!
பிரபல ஆஸ்திரேலிய இதழ் ஒன்றால், இந்த ஆண்டின் சிறந்த அழகி என்றும் கினா அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
ஆனாலும் அவர் வார்த்தைகளில் அடக்கம் காட்டு கிறார், ‘‘உலகில் ஒவ்வொருவரும் அழகுதான். நான் பிறரின் கவனத்தை ஈர்ப்பதற்காக எனது படங்களை வெளியிடுவதில்லை. அது எனக்குப் பிடிக்காது. எந்த வயதிலும் அழகாக, கவர்ச்சிகரமாக இருக்கலாம் என்று மற்ற பெண்களுக்கு ஊக்கம் கொடுப்பதற்காகவே படங்களை வெளியிடுகிறேன். வாழ்க்கை ரொம்பவும் குறுகியது. அதில் யாரைப் பற்றிய எவரது மதிப்பீடும் தேவையில்லை. உங்களின் உண்மையான வயதையும் இயற்கை அழகையும் ஏற்றுக்கொள்ளுங்கள். அதனால் ஒன்றும் குடிமுழுகிப் போய்விடாது’’ என்கிறார்.
மறுபுறம் இங்கிலாந்தில் கேரி ஹில்டன், ‘‘அவரது வயதுக்கு கினா அழகாகத் தோன்றுகிறார்தான். அதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் அவர் தான் பெரிதாக அழகு சிகிச்சை எதுவும் செய்துகொள்ளவில்லை என்று கூறுவதை நான் நம்பமாட்டேன்’’ என்கிறார் தடாலடியாக.
தான் தனது அழகு சிகிச்சைகளுக்காக 13 ஆயிரம் பவுண்டு (ரூ. 11 லட்சம்) செலவழித்திருப்பதாகவும் கேரி வெளிப்படையாகத் தெரிவிக்கிறார்.
சமூக வலைதளங்களிலும் நேரடியாகவும் கேரியை ‘பின்தொடர்வோர்’ எண்ணிக்கை அதிகம்தான். ஆனால் அவரைப் பற்றிய ஓர் உண்மை தெரிந்தால் யாருக்கும் அவரை நெருங்கும் தைரியம் வராது.
ஆம், இவர் கிக் பாக்சிங்கில் பிளாக் பெல்ட் பெற்றவர். இங்கிலாந்து சார்பில் சர்வதேச கிக் பாக்சிங் போட்டிகளில் 6 வெள்ளிப் பதக்கங்களை வென்றிருக்கிறார்!