தாய்மையும் கடமையும் கலந்த பெண்மை

ஆபத்தில் இருக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகளை காப்பாற்றுவதற்காக பெங்களூரு மாநகரில் ‘ஹொய்சாளா பிங்க்’ என்ற வாகனங்கள் காவல்துறை சார்பில் ரோந்துபணியில் ஈடுபடுகின்றன.

Update: 2018-06-17 09:37 GMT
பத்தில் இருக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகளை காப்பாற்றுவதற்காக பெங்களூரு மாநகரில் ‘ஹொய்சாளா பிங்க்’ என்ற வாகனங்கள் காவல்துறை சார்பில் ரோந்துபணியில் ஈடுபடுகின்றன. சமீபத்தில் ரோந்து பணியில் உதவி சப்-இன்ஸ்பெக்டர் நாகேஷ், பெண் போலீசார் அர்ச்சனா, கலாவதி ஆகியோர் ஈடுபட்டிருந்தபோது, எலெக்ட்ரானிக் சிட்டி போலீஸ் நிலையத்தில் இருந்து அவர்களை தொடர்புகொண்டனர். ‘தொட்டதொகூரு செலிபிரிட்டி லே-அவுட் குப்பை மேட்டில் குழந்தை ஒன்று கிடக்கிறது. அங்கு விைரந்து செல்லுங்கள்’ என்று தகவல் கொடுத்தனர். அதை கேட்டதும், பெண் போலீஸ் அர்ச்சனாவிடம் கடமை உணர்வும், தாய்மை உணர்வும் ஒருசேர கிளர்ந்தது.

அடுத்த 10 நிமிடத்தில் அர்ச்சனா குழுவினர் அந்த இடத்தை அடைந்தனர். அங்கு மக்கள் கூட்டம். கூட்டத்தை விலக்கிச் சென்று பார்த்த போலீஸ் குழுவினருக்கு அதிர்ச்சி. பிறந்த சில மணி நேரத்தில், தொப்புள்கொடி கூட சரியாக அறுக்கப்படாமல், ரத்தமும் சதையும் தோய்ந்த பரிதாபமான நிலையில் பிளாஸ்டிக் பையில் சுற்றப்பட்டு, குப்பைமேட்டில் ஆண் குழந்தை அனாதையாக கிடந்தது. தொப்புள் கொடியோடு தன்உறவையும் அறுத்துக்கொண்ட தாய் அனாதையாக ஆக்கிவிட்டதால், அபயம் தேடி அது அழுது... அழுது.. நாக்கு வறண்டு காணப்பட்டது. அதை பார்த்து இதயம் கனத்துப்போன பெண் போலீஸ் அர்ச்சனா அந்த குழந்தையை அள்ளி எடுத்து, உடனே அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். டாக்டர்கள் அந்த குழந்தையின் தொப்புள் கொடியை சரியாக அறுத்து, சுத்தம் செய்து, முதல் உதவி சிகிச்சை அளித்து மீண்டும் போலீஸ் வசம் ஒப்படைத்தனர்.

குழந்தையை கையில் வாங்கினார் அர்ச்சனா. அது அழக்கூட சக்தியின்றி இருந்தது. தற்போதுதான் மகப்பேறு விடுமுறை முடிந்து பணியில் சேர்ந்த அர்ச்சனாவுக்கு, அந்த குழந்தை தாய்ப்பால் குடிக்காமல் பசியால் துவண்டு போயிருக்கிறது என்பது புரிந்தது. உடனே தாய்மை உணர்வு மேலோங்க, போலீஸ் நிலையத்தில் வைத்தே அந்த குழந்தையை அரவணைத்து தாய்ப்பால் புகட்டினார். அந்த தாயின் முகம் பார்த்து மகிழ்ந்து தாய்ப்பால் குடித்த குழந்தை சிறிது நேரத்தில் இயல்பு நிலைக்கு திரும்பியது.

அதன் பிறகு குழந்தை அழத்தொடங்கியது. அந்த அழுகை மூலம் அர்ச்சனாவுக்கு தனது நன்றியினை தெரிவித்திருக்கிறது. அதை பார்த்து அங்கிருந்த அனைவரும் நெகிழ்ந்துபோக, அர்ச்சனா கண்களிலும் நீர் கோர்த்துவிட்டது. அங்கிருந்தவர்கள் அர்ச்சனாவை மனதார பாராட்டினார்கள்.

அர்ச்சனாவின் இந்த மனிதாபிமான செயல் பற்றி பெங்களூரு மாநகர போலீசார் தங்கள் டுவிட்டர் மற்றும் முகநூல் பக்கத்தில் பதிவிட்டனர். இதை அறிந்த மாநில போலீஸ் டி.ஜி.பி. நீலமணி ராஜூ, பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் சுனில் குமார், எலெக்ட்ரானிக் சிட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் போலோத்தீன் உள்பட பல உயர் அதிகாரிகள் பாராட்டினார்கள். பொதுமக் களிடம் இருந்தும் பாராட்டுகள் குவிந்தன. கர்நாடக மாநில மகளிர் ஆணையத்தின் தலைவி நாகலட்சுமி பாய் நேரிலேயே போலீஸ் நிலையத்துக்கு வந்து அர்ச்சனாவை பாராட்டினார். கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமியும் அர்ச்சனாவுக்கு டுவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்தார்.

பாராட்டு மழையில் நனைந்து, தாய்மையின் பூரிப்பில் இருக்கும் பெண் போலீஸ் அர்ச்சனாவை சந்தித்தோம். ‘காவல்துறையில் இருப்பவர்கள் கடின மனம் கொண்டவர்கள் என்பார்கள். அதையெல்லாம் தவிடுபொடியாக்கி அன்பு, கருணை, மனிதாபிமான மிக்கவர்கள் என்று நிரூபித்து உள்ளீர்கள்.. வாழ்த்துக்கள்..!’ என்றோம். அவர் பேச ஆரம்பித்தார்.

‘‘அந்த குழந்தையை மீண்டது எங்கள் கடமை. போலீஸ் துறையில் இருக்கும் எங்களிடமும் அன்பும், கருணையும் நிறைய உண்டு. முதல் உதவிக்கு பின்பு குழந்தையை கையில் வாங்கிய நான், அது பசியால் துவண்டுவிட்டது என்பதை உணர்ந்தேன். மறுகணமே அந்த குழந்தையை என் குழந்தையாக நினைத்து போலீஸ் நிலையத்தில் வைத்து தாய்ப்பால் புகட்டினேன். தாய்ப்பால் குடித்த குழந்தை அதன் மூலம் சக்தி கிடைத்து அழத்தொடங்கியது. அப்போது, போலீஸ் நிலையத்தில் இருந்த அனைவரும் கைதட்டி ஆரவாரத்தை வெளிப்படுத்தியதோடு, என்னையும் பாராட்டினார்கள். இனிப்புகள் வழங்கி அங்கு ஒரு கொண்டாட்டமே நிகழ்ந்துவிட்டது.

பசியால் வாடிவதங்கிவிட்ட அந்த குழந்தைக்கு அந்த நேரத்தில் கொடுக்க வேண்டிய உணவு தாய்ப்பால் தான். வேறு எந்த உணவாலும் அதை ஈடு செய்ய முடியாது என்பதை உணர்ந்த நான், அதை என் குழந்தையாக நினைத்து தாய்ப்பால் கொடுத்தேன். எனக்கு 10 மாத ஆண் குழந்தை இருக்கிறது. அதற்கு நான் பாலூட்டிக்கொண்டிருக்கிறேன். அதனால் தக்கநேரத்தில் இந்த குழந்தைக்கும் தாய்ப்பால் புகட்ட முடிந்தது. இது எனக்கு ஆத்ம திருப்தியை கொடுத்துள்ளது.

எந்த பெண்ணும் தன் குழந்தையை அனாதையாக்கக்கூடாது. நானும் தாயாக இருப்பதால், பிறந்த குழந்தைக்கு தாயும், தாய்ப்பாலும் மிக முக்கியம் என்பதை நன்கு உணர்வேன். சிலர் தங்கள் அழகு குலைந்துபோய்விடும் என்று தவறாக கருதிக்கொண்டு பெற்ற குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டுவது கிடையாது. சிலர், பொது இடங்களில் தங்களின் குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்ட தயங்குகிறார்கள். பிறந்த குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிப்பது தாய்ப்பால்தான். அதனால் தயக்கமின்றி எல்லா பெண்களும் தாய்ப்பால் புகட்டவேண்டும். யாரும் உங்கள் குழந்தையை அனாதையாக்காதீர்கள். ஒருவேளை, குடும்ப சூழலால் குழந்தையை வளர்க்க முடியாத நிலை இருந்தால் அதை பாதுகாத்து சட்டப்படி அரசுக்கு தத்துகொடுத்து விடுங்கள். இது கர்நாடகம், தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் நடைமுறையில் உள்ளது. அதைவிடுத்து இப்படி அனாதையாக வீசிச் செல்வது உலகத்திலேயே மிகப்பெரிய பாவம்’’ என்றார்.

அர்ச்சனா துமகூரு மாவட்டத்தில், தொட்டேரி என்ற பகுதியில் சாதாரண குடும்பத்தில் பிறந்தவர். இவரது பெற்றோர்: சிவானந்தையா- உமா. அர்ச்சனா பி.ஏ. பட்டதாரி. வயது 31. சமூக சேவை ஆர்வத்தோடு 5 ஆண்டுகளுக்கு முன்பு போலீஸ் பணியில் சேர்ந்தார். எலெக்ட்ரானிக் சிட்டி போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். இவர் 2 ஆண்டுகளுக்கு முன்பு துமகூரு நகரை சேர்ந்த சுனில்குமார் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்கள் பெங்களூரு பெட்ட தாசனபுராவில் வசித்து வரு கிறார்கள். சுனில்குமார் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதியின் பத்து மாத ஆண் குழந்தையின் பெயர் ஆஷித். இருவரும் வேலைக்கு செல்வதால், அர்ச்சனாவின் குழந்தையை அவருடைய மாமியார் சாந்தகுமாரியும், மாமனார் பிரசன்னகுமாரும் கவனித்து வருகிறார்கள்.

மீட்கப்பட்ட ஆண் குழந்தைக்கு குமாரசாமி என்று, கர்நாடக மாநில முதல் மந்திரியின் பெயரை சூட்டியிருப்பதாக, உதவி சப்-இன்ஸ்பெக்டர் நாகேஷ் கூறினார். இந்த குழந்தையை செலிபிரிட்டி லே-அவுட் பகுதியில் இருந்து போலீசார் மீட்டபோது அங்கு கூடியிருந்த பொதுமக்களில் சிலர் குழந்தையை தாங்களே வளர்க்க விரும்புவதாக தெரிவித்தார்கள். சட்டமுறைப் படியே அது நடக்கவேண்டும் என்பதால் தற்போது குழந்தை பெங்களூருவில் உள்ள அரசு காப்பகத்தி்ல் பராமரிக்கப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்