நீருக்கு அலையும் மிருகங்களும்.. தாகம் தீர்க்கும் மனிதரும்..
ஏழை மக்கள் நிறைந்த கென்யா நாட்டில் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவுகிறது. அங்கு வசிக்கும் மக்கள் குடிப்பதற்கு தண்ணீர் தேடி பல மைல் தூரம் அலைய வேண்டியிருக்கிறது.
ஏழை மக்கள் நிறைந்த கென்யா நாட்டில் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவுகிறது. அங்கு வசிக்கும் மக்கள் குடிப்பதற்கு தண்ணீர் தேடி பல மைல் தூரம் அலைய வேண்டியிருக்கிறது. காடுகளும் பாலைவன பிரதேசமாக மாறிவிடுவதால் விலங்குகளும் கடும் பாதிப்புக்கு ஆளாகின்றன. தாகம் தீர்க்க தண்ணீர் கிடைக்காமல் விலங்குகள் உயிரிழக்கின்றன. விலங்குகளை பராமரிக்கும் மிருக காட்சி சாலையிலும் இதே நிலைமைதான் நீடிக்கிறது.
அங்குள்ள டிஷவோ தேசிய பூங்கா வறட்சியின் கோரப்பிடியில் சிக்கி பொலிவிழந்து காணப்படுகிறது. அங்கு பராமரிக்கப்படும் மிருகங்களின் தாகத்தை போக்கும் பணியில் தன்னை ஈடுபடுத்தி கொண்டிருக்கிறார் பேட்ரிக் கிலோனாஸா மோவாலுயா என்ற சமூக சேவகர். 41 வயதான இவர் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்.
வன விலங்குகள் மீது கொண்ட பிரியத்தால் லாரியில் தண்ணீர் கொண்டு வந்து அவைகளின் தாகத்தை போக்கிக்கொண்டிருக்கிறார். சுற்றுவட்டார பகுதிகளில் வறட்சி தாண்டவமாடுவதால் லாரி டேங்கரில் தண்ணீர் நிரப்புவதற்கு 100 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து வருகிறார். ஆரம்பத்தில் ஒருநாள் பூங்காவிற்குள் இருக்கும் ஓடைக்குள் தண்ணீர் ஊற்றிவிட்டு திரும்பி வருவதற்குள் நீர் முழுவதும் வற்றி போயிருக்கிறது. 10, 20 தடவை தண்ணீர் ஊற்றிய போதும் இதே நிலைதான் நீடித்திருக்கிறது. அதனால் இரவு பகல் பாராமல் தொடர்ச்சியாக ஓய்வின்றி ஓடையில் தண்ணீர் நிரப்பும் பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டிருக்கிறார். ஒவ்வொரு வாரமும் 10 ஆயிரம் லிட்டர் தண்ணீர் சப்ளை செய்து கொண்டிருக்கிறார். தொலை தூரத்தில் பேட்ரிக் லாரியில் வருவதை பார்த்ததுமே விலங்குகள் அந்த ஓடையை நோக்கி படையெடுக்க தொடங்கிவிடுகின்றன. அவ்வளவு தாகம் அவைகளுக்கு!
‘‘நான் வன விலங்குகள் நடமாடும் வனப்பகுதியையொட்டிய கிராமத்தில்தான் பிறந்து வளர்ந்தேன். கடந்த ஆண்டு சரியாக மழை பொழியவில்லை. மனிதர்களே தண்ணீருக்கு சிரமப்படும்போது வன விலங்குகள் நீர் நிலைகளை தேடி திரியும் சம்பவம் என் மனதை உலுக்கியது. அதிலும் தேசிய பூங்காவில் இருக்கும் விலங்குகளின் நிலை ரொம்ப பரிதாபமாக இருக்கிறது. நான் தண்ணீர் சப்ளை செய்யாவிட்டால் நிறைய வனவிலங்குகள் செத்து போயிருக்கும். ஒரு நாள் இரவில் நான் தண்ணீர் கொண்டு சென்றபோது 500-க்கும் மேற்பட்ட விலங்குகள் என் வருகைக்காக காத்திருந்தன. லாரியை பார்த்ததும் அதன் பின்னால் ஓடோடி வந்தன. அந்த சம்பவம் என் மனதை நெகிழவைத்துவிட்டது. அதனால் இரவு, பகல் பாராமல் தண்ணீர் ஊற்றிக்கொண்டிருக்கிறேன். என் ஒருவனால் மட்டுமே விலங்குகளின் தாகத்தை தீர்க்கமுடியாது. வன விலங்குகளை பாதுகாக்க உலக அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறேன்’’ என்கிறார்.