பார்த்த ஞாபகம் இல்லையோ..

‘‘அம்பாசிடர்’’ என்றவுடன் கம்பீரமான தோற்ற முடைய பளிச்சிடும் வெள்ளை நிற கார் பலருடைய கண் முன் வந்து நிற்கும். அப்போது பல ஆண்டு களுக்கு பின்னோக்கி நினைவுகள் சுழலும்.

Update: 2018-06-17 07:06 GMT
‘‘அம்பாசிடர்’’ என்றவுடன் கம்பீரமான தோற்ற முடைய பளிச்சிடும் வெள்ளை நிற கார் பலருடைய கண் முன் வந்து நிற்கும். அப்போது பல ஆண்டு களுக்கு பின்னோக்கி நினைவுகள் சுழலும். அந்த காலத்தில் இந்த வகை கார் வீட்டில் இருப்பதே அந்தஸ்து, பெருமை தேடித்தரும் விஷயமாக பார்க்கப்பட்டது. அழகிய தோற்றம், வசதியான இருக்கைகள் என்று கார் பயணத்தையே மறக்க முடியாத அனுபவமாக மாற்றிய கார் இது. ‘எத்தகைய சாலையிலும் ஈடுகொடுத்து செல்லும் வாகனம். பெரும்பாலான அரசு அதிகாரிகள், நட்சத்திரங்கள் விரும்பிய கார்’ என்றால் மிகையல்ல.

பெரும்பாலான அரசு அலுவலகங்களில் இந்த கார் தான் பயன்படுத்தப்பட்டு வந்தது. அரசு அதிகாரிகளுக்கும் இந்தக் கார் தான் வழங்கப்பட்டு வந்தது. முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு குடும்பத்தினர் அனைவரும் இந்தக் காரில் தான் விரும்பிப் பயணித்தார்கள். இந்தியாவின் முதல் பிரதமராக நேரு பொறுப்பேற்றபோது அவருக்கு இந்தக் கார் தான் வழங்கப்பட்டது. இப்போதும் சோனியா காந்திக்கு விருப்பமான கார் அம்பாசிடர் தான். ராணுவம், காவல்துறை என அனைத்து அதிகாரிகளுக்கும் சேவை செய்த இந்த காரை இப்போது சாலைகளில் பார்ப்பதே அரிதான விஷயமாகிவிட்டது. கால மாற்றமும், நவீன கார்களின் அணிவகுப்பும் அம்பாசிடர் காருக்கான மவுசை குறைக்க தொடங்கின. நாளுக்கு நாள் இதன் தேவையும், சேவையும் குறைந்து கொண்டிருக்கிறது.

வாகன உலகத்தின் ஜாம்பவனாக தனி ஆவர்த்தனம் செய்து கொண்டிருந்த அம்பாசிடருக்கு வெளிநாட்டு கார்களால் சறுக்கல் ஏற்பட்டது. அப்போது நவீன வடிவமைப்புடனும், சவுகரியமான வசதிகளுடனும் புதிய மாடல்களில் கார்கள் பரவலாக சாலைகளில் உலா வர தொடங்கின. வாஜ்பாய் பிரதமரானபோது அம்பாசிடருக்கு பதில் பி. எம். டபிள்யூ காரை தேர்ந்தெடுத்தார். அவரைத் தொடர்ந்து பல மந்திரிகளும் அதிகாரிகளும் விதவிதமான வெளிநாட்டுக் காரை பயன்படுத்தினார்கள். அதை தொடர்ந்து நாளுக்கு நாள் மாறுபட்ட வடிவமைப்பில் புதுவிதமான கார்கள் வந்து குவிந்தன.

நம் நாட்டின் சொந்த தயாரிப்பான அம்பாசிடர் உற்பத்தியை குஜராத்தில் 1942-ல் இந்துஸ்தான் மோட்டார்ஸ் லிமிடெட் தொடங்கியது. இந்திய சாலைகளில் நன்கு ஓட்டி சோதனை செய்யப்பட்டு விற்பனைக்கு வந்தது. கிராமம், நகரம் என்று எதற்கும் அஞ்சாத வாகனம் இது. ஆரம்பத்தில் பெட்ரோலில் இயங்கிய இந்த வாகனம் பிறகு சிக்கனம் கருதி டீசலுக்கு மாற்றப்பட்டது. 1984-ல் இதன் விற்பனை ஒரு லட்சமாக இருந்தது. 2004-ல் 4 லட்சமாக உயர்ந்தது. இதன் மற்றொரு சிறப்பு என்னவென்றால் இதன் வெளிப்புற தோற்றத்தில் 65 ஆண்டு களாக எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கார் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் என்ற இலக்கணத்தோடு வலம் வந்தது. அதன் தோற்றம் அனைவருக்கும் பிடித்திருந்தது. பலராலும் விரும்பப்பட்ட இந்த கார் வெளிநாட்டு கார் களின் வரவால் பெரிதும் பாதிக்கப்பட்டது. பலவித வசதிகளுடன் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு கார்களுடன் போட்டி போட முடியாமல் அம்பாசிடர் பின் தங்கி விட்டது.

குஜராத்தில் இயங்கி வந்த அம்பாசிடர் தொழிற்சாலை பிறகு மேற்கு வங்காளத்திற்கு மாற்றப்பட்டது. அங்குள்ள உத்தர்பாராவில் அமைந்திருந்த தொழிற் சாலையில் உற்பத்திக்கேற்ற விற்பனையில்லாமல் போனது. ஒரு காலத்தில் கார் பதிவு செய்துவிட்டு காத்திருப்போர் பட்டியல் நீளமாக இருந்தது. அந்த நிலை மாறி தயாரிக்கப்பட்ட கார்களை வாங்க ஆளின்றி வரிசையில் நின்றிருந்தது தான் இதன் வீழ்ச்சியின் ஆரம்பம். இது தவிர ஒவ்வொரு மாதமும் ரூ.8 கோடி நஷ்டத்தில் ஓடிக் கொண்டிருந்த இந்த தொழிற்சாலை ஒருகட்டத்தில் தன் ஓட்டத்தை நிறுத்திக் கொண்டது. பிறகு கால் டாக்சி களாக பயன்படுத்தப்பட்டது. மைலேஜ் அதிகம் தரக்கூடியது என்பதால் டாக்சியை பயன்படுத்துவோருக்கு லாபம் தரக்கூடிய வாகனமாக இருந்தது. ‘‘டாப் கியர் மேகசின்’’ நடத்திய சர்வே படி உலகிலேயே அதி உன்னத டாக்சியாக அம்பாசிடர் அப்போது தேர்வு செய்யப்பட்டிருந்தது.

இருபத்தைந்து ஆண்டுகளாக நவீன கார்கள் இந்திய சாலைகளில் வழுக்கிக்கொண்டு ஓட ஆரம்பித்து, அம்பாசிடரை வழுக்கிவிழ வைத்து விட்டது. இது பின்னடைவை சந்திக்க வேறு பல காரணங்களும் இருக்கின்றன. முக்கிய காரணம், இதற்கென தனிப்பட்ட முறையில் எந்த விளம்பரமும் செய்யப்படவில்லை. வெளிநாட்டு கார்கள் எல்லாம் விளம்பரம் மூலமாக மக்கள் மனதில் இடம்பிடித்து விட்டது. அம்பாசிடர் அமைதியாக இருந்துவிட்டது.

சமீபத்தில் இந்த கார் பல நவீன மாற்றங்களுடன் மீண்டும் வெளிவந்திருக்கிறது. வெளிதோற்றம், உட்புற தோற்றம், வசதி என வெளிநாட்டு கார்களை மிஞ்சும் அளவுக்கு சகல வசதி களுடன் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்துஸ்தான் மோட்டார்ஸ் தயாரிப்பான இந்த முதல் காரை சஞ்சய் தத் வாங்கி இருக்கிறார்.

மேலும் செய்திகள்