திருச்சி மாவட்டத்தில் ரத்த தானத்தால் 10 ஆயிரம் பேர் பயன் அடைந்து உள்ளனர்

திருச்சி மாவட்டத்தில் ரத்த தானத்தால் 10 ஆயிரம் பேர் பயன் அடைந்து உள்ளனர் என்று விழிப்புணர்வு ஊர்வலத்தை தொடங்கி வைத்து கலெக்டர் ராஜாமணி கூறினார்.;

Update: 2018-06-16 23:12 GMT
திருச்சி,

உலக ரத்ததான தினத்தையொட்டி திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் ரத்த தான விழிப்புணர்வு ஊர்வலத்தை திருச்சி மாவட்ட கலெக்டர் கே. ராஜாமணி நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

திருச்சி மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையில் ரத்ததானம் வழங்க பொதுமக்கள் முன்வர வேண்டும். ரத்த தானம் வழங்குவதற்கு பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நோயாளிகளை ஆபத்தில் இருந்து காப்பாற்றுவதற்கும், மனித உயிர்களுக்கு வாழ்க்கை தரக்கூடியது ரத்த தானம் ஆகும்.

அனைவரும் தானாக முன்வந்து சேவை மனப்பான்மையுடன் ரத்ததானம் வழங்க வேண்டும். நமது மாவட்டத்தில் கடந்த ஆண்டு மட்டும் 10 ஆயிரம் நோயாளிகளுக்கு ரத்தம் வழங்கப்பட்டு அவர்கள் பயன் அடைந்து உள்ளனர். இந்த ஆண்டு ரத்தக் கொடையாளர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். நோயாளிகளை காப்பாற்ற முழு மனப்பான்மையுடன் அனைவரும் செயல்பட வேண்டும். திருச்சி மாவட்டத்தில் 2 அரசு மற்றும் 10 தனியார் ரத்த வங்கிகள் உள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.

ஊர்வலத்தில், கி.ஆ.பெ. விசுவநாதன் அரசு மருத்துவ கல்லூரி டீன் அனிதா, துணை இயக்குனர்கள் ரவீந்திரன் (சுகாதாரம்)், சாவித்திரி(காசநோய்), எலிசபெத்மேரி (குடும்பநலம்), மருத்துவமனை கண்காணிப்பாளர் ஏகநாதன், மாவட்ட திட்ட மேலாளர்(எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகு)மணிவண்ணன், மற்றும் டாக்டர்கள், மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள், செவிலியர்கள் கலந்து கொண்டனர். ஊர்வலம் வெஸ்ட்ரி பள்ளி, எம்.ஜி.ஆர். சிலை வழியாக அரசு மருத்துவமனையை சென்றடைந்தது.

முன்னதாக இதுவரை 108 முறை ரத்த தானம் செய்த கே.கே.நகரை சேர்ந்த கோபால், 90 முறை ரத்த தானம் செய்த பாலசுந்தரம் உள்பட அதிக அளவில் ரத்த தானம் செய்தவர்களுக்கு கலெக்டர் ராஜாமணி பாராட்டு தெரிவித்து சான்றிதழ்களை வழங்கினார்.

மேலும் செய்திகள்