நாமக்கல், குமாரபாளையத்தில் சூறாவளி காற்றுடன் மழை

நாமக்கல் பகுதியில் நேற்று சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. குமாரபாளையத்தில் மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.;

Update: 2018-06-16 23:30 GMT
நாமக்கல்,

நாமக்கல் நகரில் கடந்த 1-ந் தேதி முதல் மழை பெய்யவில்லை. இருப்பினும் ஓரளவு குளிர்ச்சியான சீதோஷ்ண நிலையே நீடித்து வந்தது. இந்த நிலையில் நேற்று காலை முதலே வழக்கத்திற்கு மாறாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.

மாலை 5 மணி அளவில் திடீரென சூறாவளி காற்று மற்றும் இடி-மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை ½ மணி நேரத்திற்கு மேலாக நீடித்தது. இதனால் சாலையோரங்களிலும், பள்ளமான பகுதிகளிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதை காண முடிந்தது. பொதுமக்கள் குடை பிடித்து செல்வதையும், வாகன ஓட்டிகள் ஆமை வேகத்தில் மெதுவாக செல்வதையும் பார்க்க முடிந்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு பெய்த இந்த மழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த மழை காரணமாக இரவில் குளிர்ந்த காற்று வீசியது.

இதேபோல் நேற்று பிற்பகல் 2.30 மணி முதல் 4 மணி வரை ஒன்றரை மணி நேரம் பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இந்த மழைக்கு குமாரபாளையம் - பள்ளிபாளையம் ரோட்டில் உள்ள அபெக்ஸ் காலனி பாலம் அருகே 30 ஆண்டுகளாக இருந்த வாகை மரம் ஒன்று முறிந்து விழுந்தது. இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தாசில்தார் ரகுநாதன் நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். இதன்பேரில் நகராட்சி ஊழியர்கள் விரைந்து வந்து மரத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.

மேலும் செய்திகள்