இறந்ததாக கருதப்பட்ட வாலிபர் பிரேத பரிசோதனை அறிக்கையில் கொலை செய்யப்பட்டு இருப்பதாக அம்பலம்

குடிபோதையில் தவறி விழுந்து இறந்ததாக கருதப்பட்ட வாலிபர், பிரேத பரிசோதனை அறிக்கையில் அடித்துக்கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து இயற்கை மரணமாக பதிவு செய்து முடிக்கப்பட்ட இந்த வழக்கை, கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Update: 2018-06-16 22:38 GMT
பெரம்பூர்,


சென்னை கொடுங்கையூர் கண்ணதாசன் நகர் பஸ் நிலையம் அருகில் கடந்த 6-ந் தேதி வாலிபர் ஒருவர் தலையில் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற கொடுங்கையூர் போலீசார், வாலிபரின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் நடத்திய விசாரணையில் இறந்து கிடந்தவர் கொடுங்கையூர் தென்றல் நகரைச் சேர்ந்த விக்கி என்ற விக்னேஷ்(வயது 28) என்பது தெரிந்தது. குடிப்பழக்கம் உடைய அவர், அளவுக்கு அதிகமாக குடித்ததால் போதையில் தவறி விழுந்து, தலையில் காயம் ஏற்பட்டு இறந்து இருப்பதாக நினைத்து இயற்கை மரணம் என்று கருதிய போலீசார், வழக்கை முடித்து வைத்து விட்டனர்.

இதற்கிடையில் பலியான விக்னேஷின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது. அதில் அவர், போதையில் தவறி விழுந்து சாகவில்லை என்பதும், மர்மநபர்கள் அவரை அடித்துக்கொலை செய்து இருப்பதும் தெரிய வந்தது.

இதையடுத்து இயற்கை மரணம் என பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கை, போலீசார் மீண்டும் கொலை வழக்காக மாற்றி பதிவு செய்தனர். மேலும் விக்னேஷ் கொலைக்கான காரணம் என்ன?, கொலையாளிகள் யார்? என்பது குறித்து தனிப்படை அமைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கொடுங்கையூர் போலீஸ் நிலையத்தில் ஏற்கனவே இதுபோல் ஒரு கொலை வழக்கை தீவிர விசாரணை நடத்தாமல் இயற்கை மரணம் என்று கருதி அவசரகதியில் போலீசார் அந்த வழக்கை முடித்து வைத்து விட்டனர்.

பின்னர் பிரேத பரிசோதனை அறிக்கையில் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்ததால் அந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தினர்.

தற்போது 2-வது முறையாக கொடுங்கையூர் போலீசார், விக்னேஷ் கொலை செய்யப்பட்டு இருப்பதையும் முழுமையாக விசாரிக்காமல் இயற்கை மரண வழக்காக பதிவு செய்து வழக்கை முடித்து விட்டனர். பிரேத பரிசோதனை அறிக்கையை தொடர்ந்து மீண்டும் அந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்