வில்லியனூர் அருகே போலி பத்திரம் தயாரித்து வீட்டுமனை மோசடி: போலீஸ்காரர் உள்பட 6 பேர் மீது வழக்கு

வில்லியனூர் அருகே போலி பத்திரம் தயாரித்து வீட்டு மனையை விற்று மோசடி செய்த போலீஸ்காரர் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2018-06-16 22:00 GMT

வில்லியனூர்,

வில்லியனூர் அருகே ஒதியம்பட்டு முஸ்லிம் தெருவை சேர்ந்தவர் ஷாகிரா பேகம் (வயது 53). இவர், கடந்த 2016–ம் ஆண்டு அதே பகுதியில் ரூ.8 லட்சத்து 20 ஆயிரத்திற்கு ஒரு வீட்டு மனையை செல்லப்பெருமாள் பேட்டையை சேர்ந்த அண்ணாதுரை மற்றும் அவரது மகன் ராம்குமார் ஆகியோரிடம் இருந்து வாங்கினார்.

இந்த வீட்டு மனையை ஷாகிரா பேகத்திற்கு வாங்கி கொடுப்பதற்கு வில்லியனூரை சேர்ந்த தண்டபாணி, கிளிஞ்சி குப்பத்தை சேர்ந்த சேகர், பத்திர எழுத்தர் இந்திரா மற்றும் அவரது உறவினர் ஐ.ஆர்.பி.என். போலீஸ்காரரான சண்முகவேலு ஆகியோர் புரோக்கர்களாக இருந்ததாக தெரிகிறது.

இந்த வீட்டு மனையை சுத்தம் செய்வதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஷாகிரா பேகம் சென்றார். அப்போது அந்த வீட்டு மனை மற்றொருக்கு சொந்தமானது என்பதும், போலி பத்திரம் தயாரித்து மோசடியாக தனக்கு விற்பனை செய்து இருப்பதும் தெரிந்து அவர் அதிர்ச்சி அடைந்தார். தெரிந்தது. இதுகுறித்து புரோக்கர்களிடம் சென்று ஷாகிரா பேகம் கேட்ட போது அவர்கள் பணத்தை திருப்பித் தருவதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால் பல மாதங்களாகியும் பணத்தை அவர்கள் திருப்பி கொடுக்கவில்லை.

இதனால் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த ஷாகிராபேகம் இதுகுறித்து வில்லியனூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சண்முகசுந்தரம், சப்–இன்ஸ்பெக்டர் வேலய்யன் ஆகியோர் ஐ.ஆர்.பி.என். போலீஸ்காரர் சண்முகவேலு உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்