புதுச்சேரி ஆட்சிக் கலைப்பு திட்டத்தில் கவர்னருக்கும் பங்கு உண்டு அன்பழகன் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு

புதுவை ஆட்சியை கலைக்கும் மத்திய அரசின் திட்டத்தில் கவர்னர் கிரண்பெடிக்கும் பங்கு உள்ளதாக அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. குற்றஞ்சாட்டினார்.

Update: 2018-06-16 23:15 GMT

புதுச்சேரி,

புதுவை அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:–

புதுவை மாநிலத்தில் நிதி நெருக்கடியை உருவாக்கி இந்திய அரசியலமைப்பு சட்டம் 360–ன்படி அரசை முடக்க மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. கவர்னர் தலைமையில் 2 மாதத்துக்கு முன்பு திட்டக்குழு கூட்டம் நடத்தப்பட்டு அதன் அறிக்கை மத்திய அரசுக்கு அனுப்பப்பட்ட நிலையில் அதற்கு மத்திய அரசு இதுவரை அனுமதி அளிக்கவில்லை. இதன் மூலம் ஆளும் காங்கிரஸ் அரசை கலைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கிறது என்று அ.தி.மு.க. குற்றஞ்சாட்டுகிறது.

பட்ஜெட்டிற்கு அனுமதி கேட்டு கவர்னர்தான் மத்திய அரசுக்கு கோப்பினை அனுப்பினார். ஆனால் அதற்கு ஒப்புதல் பெற அவர் ஏன் தொடர் நடவடிக்கை எடுக்கவில்லை? எனவே மத்திய அரசின் ஆட்சி கலைப்பு திட்டத்தில் கவர்னருக்கும் பங்கு இருப்பதுபோல் தெரிகிறது.

மத்திய அரசிடம், புதுவை காங்கிரஸ் அரசு மாநிலத்தின் உரிமையை விட்டுக்கொடுக்கக்கூடிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதற்கு கட்சி வித்தியாசமின்றி அனைவரும் ஜனநாயக வழியில் குரல் கொடுக்க வேண்டும். இது புதுவை மாநிலத்துக்கு விடப்பட்ட சவால். இதற்கு தார்மீக பொறுப்பேற்று முதல்–அமைச்சர் நாராயணசாமி தனது பதவியை ராஜினாமா செய்யவேண்டும்.

இதற்காக அவர் கவர்னர் மாளிகையிலோ, டெல்லிக்கோ சென்று டெல்லி முதல்–அமைச்சர்போல் போராட்டம் நடத்த வேண்டும். கவர்னர்– முதல்–அமைச்சர் மோதலினால் காவல்துறையின் ஒட்டுமொத்த நிர்வாகமும் சீரழிந்துபோய் உள்ளது. 5 போலீஸ் சூப்பிரண்டுகள் ஒட்டுமொத்தமாக விடுப்பில் சென்றுள்ளனர். 21 போலீஸ் சூப்பிரண்டு பணியிடங்களில் 9 இடங்கள் காலியாக உள்ளன.

அதேபோல் 21 இன்ஸ்பெக்டர் பணியிடங்களும், சப்–இன்ஸ்பெக்டர் பதவிகள் 30–ம், உதவி சப்–இன்ஸ்பெக்டர் பதவிகள் 35–ம் காலியாக உள்ளது. துறை ரீதியிலான பதவி உயர்வு குழு கூட்டம் கூட்டப்பட்டும் இதில் எந்தவித இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை.

மணல் திருட்டை தடுக்கக்கூடாது என்று முதல்–அமைச்சரும், அமைச்சர்களும் காவல்துறைக்கு உத்தரவிடுகிறார்கள். காவல்துறையில் சாதி, இன ரீதியாக மோதல் போக்குடன் அதிகாரிகள் செயல்பட்டு வருகிறார்கள். போலீஸ் சூப்பிரண்டு ஒருவர் தனக்கு சட்டம் ஒழுங்கு பிரிவே வேண்டாம் என்று எழுதி கொடுத்துவிட்டு விடுப்பில் சென்றுள்ளதாக தெரிகிறது.

5 போலீஸ் சூப்பிரண்டுகள் ஒட்டுமொத்தமாக விடுப்பில் செல்ல காரணம் என்ன? அவர்களுக்கு விடுப்பு கொடுத்தது யார்? ஆர்டலி முறை இருக்கக்கூடாது என்று கோர்ட்டு உத்தரவிட்டும் புதுவையில் 82 காவலர்கள் உயர் அதிகாரிகளின் வீட்டில் ஆர்டலியாக பணியாற்றி வருகின்றனர்.

இவ்வாறு அன்பழகன் எம்.எல்.ஏ. கூறினார்.

மேலும் செய்திகள்