முறைகேடாக நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதாக புகார்: தனியார் மது ஆலையில் கிரண்பெடி அதிரடி ஆய்வு ‘பீரை விட குடிநீர் தான் மக்களுக்கு முக்கியம்’
முறைகேடாக நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதாக புகார் தெரிவிக்கப்பட்டதன்பேரில் தனியார் மது ஆலையில் கவர்னர் கிரண்பெடி அதிரடி ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறுகையில், ‘பீரை விட மக்களுக்கு குடிநீர் தான் முக்கியம்’ என்று தெரிவித்தார்.;
புதுச்சேரி,
புதுச்சேரி கவர்னர் கிரண்பெடி வார இறுதி நாட்களில் பல்வேறு இடங்களுக்கு நேரில் சென்று வளர்ச்சிப்பணிகளை மேற்கொண்டு வருகிறார். ஏரிகளை பார்வையிட்டு சுற்றி வேலி அமைத்து பாதுகாப்பது, வீணாக தண்ணீர் வெளியேறுவதை தடுப்பது, ஏரிகளுக்கு நீர் வரும் வாய்க்கால்களை தூர்வாரச் செய்வது போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
இந்தநிலையில் கவர்னர் கிரண்பெடியிடம் பொதுமக்கள் சிலர் புகார் மனு அளித்தனர். அதில், புதுவையில் பல இடங்களில் ஆழ்குழாய் கிணறு அமைத்து முறைகேடாக நிலத்தடி நீரை உறிஞ்சி எடுத்து வியாபாரம் செய்யப்படுகிறது. சில தொழிற்சாலைகள் அளவுக்கு அதிகமாக நிலத்தடி நீரை உறிஞ்சுகிறது என்றும் தெரிவித்து இருந்தனர். இதையொட்டி கடந்த வாரம் கவர்னர் கிரண்பெடி ஆய்வு செய்து ஆழ்குழாய் கிணறு மூலம் நிலத்தடி நீரை உறிஞ்சி எடுத்து விற்பனை செய்யும் நிறுவனத்திற்கு சீல் வைத்தார்.
அதன் தொடர்ச்சியாக அய்யங்குட்டிபாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மதுபான தொழிற்சாலையை நேற்று காலை கிரண்பெடி ஆய்வு செய்தார். அவருடன் சுற்றுச்சூழல், பொதுப்பணி, நீர்வளம் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சென்று இருந்தனர். இதற்காக அவர்கள் கவர்னர் மாளிகையில் இருந்து தனி பஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்டனர்.
அங்குள்ள தனியார் மதுபான தொழிற்சாலையில் கவர்னர் கிரண்பெடி ஆய்வு மேற்கொண்டார். அப்போது தொழிற்சாலைக்கான வரைபடத்தை முதலில் பார்வையிட்டார். பின்னர் தொழிற்சாலையில் நிலத்தடி நீர் எடுக்கும் பகுதி, கழிவுநீர் சுத்திகரிக்கும் பகுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களை பார்வையிட்டார்.
அப்போது கடந்த ஆண்டு எவ்வளவு நீர் எடுத்தீர்கள்? இந்த ஆண்டு எவ்வளவு நீர் எடுக்கிறீர்கள்? நிலத்தடியில் இருந்து நீர் வரும் நிலை எவ்வாறு உள்ளது? என்று கேள்விகளை எழுப்பியதுடன் எவ்வளவு நீரை நிலத்தடியில் இருந்து எடுக்கிறீர்கள் என அந்த நிர்வாக அதிகாரிகளிடம் கிரண்பெடி சரமாரியாக கேள்வி எழுப்பினார். பின்னர் நிலத்தடியில் இருந்து எடுக்கப்படும் தண்ணீரின் அளவவை அறிந்து கொள்வதற்கு வசதியாக டிஜிட்டல் மீட்டர் பயன்படுத்த வேண்டும். தனியார் தொழிற்சாலைகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றும் அந்த நிர்வாகத்துக்கு அவர் உத்தரவிட்டார்.
இந்த ஆய்வுக்குப் பின் அங்கு கவர்னர் கிரண்பெடி நிருபர்களிடம் கூறியதாவது:–
புதுச்சேரியில் உள்ள தொழிற்சாலைகள் தண்ணீரை முறையாக பயன்படுத்த வேண்டும். அதுபோல் தொழிற்சாலைகளில் உருவாகும் கழிவுநீரை முறையாக சுத்திகரிப்பு செய்ய வேண்டும். இது குறித்து தொழிற்சாலைகளுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. குடிநீர் என்பது ஏழை மக்களுக்கு கிடைக்க வேண்டிய அடிப்படை உரிமைகளில் ஒன்று. ஆனால் பீர் என்பது ஆடம்பர வாழ்க்கைக்கு பயன்படுத்தப்படுவது. எனவே பீரை விட குடிநீர்தான் முக்கியம். புதுச்சேரியில் நிலத்தடி நீரை பாதுகாக்க இதுபோன்ற எனது ஆய்வுகள் தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.