மத்திய அரசின் சாதனையை விளக்கி பிரசாரம் பாரதீய ஜனதா முடிவு

மத்திய அரசின் சாதனையை விளக்கி பிரசாரம் செய்வது என்று பாரதீய ஜனதா கட்சி முடிவு செய்துள்ளது.

Update: 2018-06-16 23:00 GMT

புதுச்சேரி,

புதுவை மாநில பாரதீய ஜனதா நிர்வாகிகள் கூட்டம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் சங்கர் எம்.எல்.ஏ., துணைத்தலைவர்கள் ஏம்பலம் செல்வம், துரை.கணேசன், பொதுச்செயலாளர்கள் தங்க.விக்ரமன், ரவிச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–

ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் மத்திய அரசின் சாதனைகளை பற்றி விளக்க கூட்டம் நடத்துவது. அப்போது 15 வித சாதனைகள் குறித்து பிரதமரின் பேச்சை ஒலிபரப்புவது.

சாதனையாளர்கள், கலைத்துறையை சேர்ந்தவர்களை அழைத்து கூட்டம் நடத்துவது. தாழ்த்தப்பட்ட மக்களின் பகுதிகளுக்கு சென்று மத்திய அரசு திட்டம் குறித்து பிரசாரம் செய்வது. கிராமங்களுக்கு சென்று கிராம சபை கூட்டம் நடத்துவது.

இளைஞர் அணியினர் மூலம் இருசக்கர வாகன ஊர்வலம் நடத்துதல். மண்டல நிர்வாகிகள் ஒவ்வொரு கிளையிலும் குறைந்தது 50 நபர்களை சந்திப்பது. மத்திய அரசின் 4 ஆண்டு சாதனைகளை மூலை முடுக்குகளில் எல்லாம் சென்று சேர்ப்பது.

மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் செய்திகள்