தஞ்சையில், 1¼ மணி நேரம் இடைவிடாது கொட்டித்தீர்த்த மழை

தஞ்சையில், நேற்று மாலை 1¼ மணி நேரம் இடைவிடாது மழை கொட்டித்தீர்த்தது. மூலை அனுமார் கோவிலுக்குள் மழை தண்ணீர் புகுந்தது.

Update: 2018-06-16 23:30 GMT
தஞ்சாவூர்,

அக்னி நட்சத்திர காலம் நிறைவடைந்தாலும் தஞ்சை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் சிறிதளவும் குறையாத நிலையே நீடித்து வருகிறது. அதிலும் கடந்த 2 நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. இரவிலும் வெப்பத்தின் தாக்கம் எதிரொலித்தது.

இந்த நிலையில், வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

தஞ்சையில் நேற்று பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மாலை நேரத்தில் திடீரென கருமேகங்கள் திரண்டு வந்தன. மாலை 4.30 மணி அளவில் லேசான தூறலுடன் மழை பெய்யத் தொடங்கியது. 5 மணி அளவில் பலத்த மழையாக பெய்ய ஆரம்பித்தது. இடி-மின்னல் எதுவும் இல்லாமல் பெய்த இந்த மழை 6.15 மணி வரை நீடித்தது. 1¼ மணி நேரம் கொட்டித்தீர்த்த இந்த மழையினால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

தஞ்சை ரெயில்வே கீழ்பாலத்தில் வழக்கம்போல் தண்ணீர் தேங்கி நின்றதால் அந்த வழியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டு மாற்று வழியில் இயக்கப்பட்டன. மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்களில் சிலர் மட்டும் தேங்கி நின்ற தண்ணீரையும் பொருட்படுத்தாமல் ரெயில்வே கீழ்பாலம் வழியாகவே சென்றனர். அவர்களால் முழுமையாக தண்ணீரை கடந்து வர முடியாமல் மோட்டார் சைக்கிள் நடுவழியில் நின்று விட்டது.

பின்னர் அவற்றை தள்ளிக்கொண்டே மறுபுறம் வந்து சேர்ந்தனர். சைக்கிள்களில் வந்தவர்களும் தள்ளிக் கொண்டே தண்ணீரை கடந்து சென்றனர். தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே பெரியார் சிலை முன்பு குளம்போல் தண்ணீர் தேங்கி நின்றது. இந்த மழையினால் பூமி குளிர்ந்து இரவில் குளிர்ந்த காற்று வீசியது.

மழையின் காரணமாக தஞ்சை மேலவீதியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த தண்ணீர் அகழியில் சென்று சேரும் வகையில் வடிகால் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அந்த வடிகாலில் அடைப்பு ஏற்பட்டதால் மேலவீதி மூலை அனுமார் கோவில் முன்பு குளம்போல் தண்ணீர் தேங்கியதுடன், கோவிலுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. உற்சவர் சாமி இருக்கும் இடம் வரை தண்ணீர் தேங்கி நின்றது.

மழை நின்ற பின்னர் இந்த தண்ணீர் வடிந்தது. இருந்தாலும் கோவிலுக்குள் சகதியாக காணப்பட்டது. அவற்றை தண்ணீர் ஊற்றி பணியாளர்கள் கழுவி விட்டனர். பலத்த மழை பெய்தாலே இந்த கோவிலுக்குள் தண்ணீர் புகுந்து விடும் சம்பவம் தொடர்கதையாக நடக்கிறது. கோவிலுக்குள் தண்ணீர் செல்லாத வகையில் நடவடிக்கை எடுக்க இந்து சமய அறநிலையத்துறை யினரும், அரண்மனை தேவஸ்தான நிர்வாகிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பக்தர்களின் கோரிக்கையாகும்.

மேட்டூர் அணையில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்படவில்லை. இதனால் ஆற்றுப்பாசனம் மூலம் குறுவை நெல் சாகுபடி செய்யப்படவில்லை. ஆழ் குழாய் கிணறு மூலம் மட்டுமே குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த சாகுபடி செய்த விவசாயிகள் நேற்று பெய்த இந்த மழையினால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கடும் வறட்சியின் காரணமாக தஞ்சையில் பல்வேறு இடங்களில் நீர்மட்டம் குறைந்து குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது. மழை தொடர்ந்து பெய்தால் நிலத்தடி நீர்மட்டம் உயர வாய்ப்பு உள்ளது.

தஞ்சையை அடுத்த நாஞ்சிக்கோட்டை பகுதியிலும் மாலை 4.30 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை மாலை 6 மணி வரை இடைவிடாது பெய்தது. இந்த மழையினால் நெல், எள், நிலக்கடலை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த மழை தொடர்ந்து பெய்ய வேண்டும் என அனைத்து தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் செய்திகள்