திருநாகேஸ்வரம் அருகே பிரபல ரவுடி கொலை வழக்கில் 9 பேர் கைது

திருநாகேஸ்வரம் அருகே பிரபல ரவுடி கொலை வழக்கில் 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-06-16 23:15 GMT
திருவிடைமருதூர்,

திருநாகேஸ்வரம் அருகே பிரபல ரவுடி கொலை வழக்கில் 9 பேரை போலீசார் கைது செய்தனர். நண்பனை கொலை செய்ததற்கு பழிக்கு பழியாக தீர்த்துக்கட்டியதாக கைது செய்யப்பட்டவர்கள் போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மோரிவாய்க்கால் தெருவை சேர்ந்தவர் பாஸ்கர். இவருக்கு சுள்ளான் சதீஷ்(வயது37), வினோத்(33) என இரண்டு மகன்கள். பிரபல ரவுடியான சுள்ளான் சதீஷ் கும்பகோணம் பகுதியில் வட்டிக்கு பணம் கொடுத்து வந்தார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 14-ந் தேதி கும்பகோணம் நீலத்தநல்லூர் ரோட்டை சேர்ந்த சந்துரு மகன் விக்ரம் என்பவருக்கும், சதீஷ்க்கும் பணம் கொடுக்கல் வாங்கலில் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சதீஷ், வினோத் ஆகியோர் அரிவாளால் வெட்டி விக்ரமை கொலை செய்தனர். அப்போது விக்ரம் உடன் இருந்த அவரது நண்பர் பாரதிக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இதுகுறித்து கும்பகோணம் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து சுள்ளான் சதீஷ் மற்றும் வினோத்தை கைது செய்தனர். பின்னர் இருவரும் ஜாமீனில் வெளியே வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 14-ந் தேதி கும்பகோணம் கோர்ட்டில் ஆஜராகி கையெழுத்துபோட்டு விட்டு சுள்ளான் சதீஷ் திருநாகேஸ்வரம் வந்துள்ளார். பின்னர் அங்கிருந்து அவர் தனது உறவினருடன் மோட்டார் சைக்கிள் மீண்டும் கும்பகோணம் நோக்கி வந்து கொண்டிருந்த போது பின்னால் வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. பின்னர் காரில் இருந்து அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வந்த ஒரு கும்பல் சுள்ளான் சதீசை வெட்டிக்கொலை செய்தது.

பின்னர் அந்த கும்பல் காரில் தப்பி சென்றபோது சீனிவாசநல்லூர் அய்யாவாடி கட்டுக்கரை சாலையில் கார் பஞ்சர் ஆனதால் அங்கேயே காரை விட்டுவிட்டு தப்பி சென்றனர். இதுகுறித்து திருநீலக்குடி போலீசார், நீலத்தநல்லூர் ரோட்டை சேர்ந்த ஆர்.பாரதி(28), மணிகண்டன்(30), காசிராமன்தெருவை சேர்ந்த தி. மணிகண்டன்(28), தேவனாஞ்சேரியை சேர்ந்த பிரபுராஜா(31), கொரநாட்டுகருப்பூரை சேர்ந்த பரத் (30) உள்பட சிலர் மீது வழக்கு பதிவு செய்தனர். கொலையாளிகளை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் உத்தரவின்பேரில் திருவிடைமருதூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரன், இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், கும்பகோணம் குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் கீர்த்திவாசன், சப்-இன்ஸ்பெக்டர் மோகன் ஆகியோர் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. கொலையாளிகளை நாகை மாவட்டம் செம்பனார்கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போலீசார் தேடிவந்தனர்.

இந்த நிலையில் திருபுவனம் விராலிமலை பஸ் நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்த பாரதிதாசன், கி.மணிகண்டன், தி. மணிகண்டன், பிரபுராஜா, பரத், வட்டிபிள்ளையார்கோவில் முதல்தெருவை சேர்ந்த ராஜ்குமார் மகன் சண்முகபிரபு(27), அண்ணாநகர் மூவேந்தன் மகன் தீபன்(30), காசிராமன்தெருவை சேர்ந்த வீரையன் மகன் கோபால்(27), காமராஜ் நகரை சேர்ந்த ராமையன் மகன் புஷ்பராஜ் (27) ஆகிய 9 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் இவர்கள் அனைவரும் சுள்ளான் சதீசால் கொலை செய்யப்பட்ட விக்ரமின் நண்பர்கள் என்பதும், நண்பனை கொலை செய்ததற்கு பழிக்கு பழியாகவே சுள்ளான் சதீசை தீர்த்துக்கட்டியதாக அவர்கள் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர். இதை தொடர்ந்து 9 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து இரு சக்கர வாகனங்களையும், அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்