சாயக்கழிவுநீர் பிரச்சினை நீடித்தால் சில ஆண்டுகளில் மக்கள் வாழ தகுதியற்ற இடமாக திருப்பூர் மாறிவிடும் கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் பேட்டி
சாயக்கழிவுநீர் பிரச்சினை நீடித்தால் இன்னும் சில ஆண்டுகளிலேயே மக்கள் வாழ தகுதியற்ற இடமாக திருப்பூர் மாறிவிடும் என்று கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கூறினார்.
திருப்பூர்,
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் திருப்பூர் குமார் நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாநில விவசாயிகள் அணி செயலாளர் கோபால்சாமி தலைமை தாங்கினார்.
மாநில இளைஞரணி செயலாளர் சூரியமூர்த்தி, மாநில தலைமை நிலைய செயலாளர் சுரேஷ்பொன்வேல், மாநகர் மாவட்ட செயலாளர் ரோபோரவி, மாநில பொருளாளர் பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கலந்து கொண்டு பேசினார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:–
திருப்பூரில் மிகவும் சிரமப்பட்டு வளர்த்த ஆயத்த ஆடை தொழில் தொடர்ந்து இறங்குமுகமாகி கொண்டிருப்பது வேதனை அளிக்கிறது. பல கஷ்டங்களை கடந்தே இந்த தொழில் உயர்ந்த நிலைக்கு வந்துள்ளது. ஆனால் இன்று அரசின் சில கொள்கை முடிவுகளாலும், பல்வேறு நடவடிக்கைகளாலும் திருப்பூரில் ஆயத்த ஆடை தொழில் ஒவ்வொரு மாதமும் குறைந்து கொண்டே வருகிறது. திருப்பூரில் உற்பத்தி குறைய, குறைய வேலை இழப்பு அதிகமாகும். அரசாங்கத்தின் கணக்கின்படி இதுவரை 5 லட்சம் பேர் வேலை இழந்திருக்கின்றனர்.
திருப்பூரில் வேலை இழப்பு தொடரும் போது, திருட்டு, கொள்ளைகள் அதிகரிக்கும். பின்னலாடை தொழில் சார்பாக மத்திய, மாநில அரசுகளிடம் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டும், இதுவரை யாரும் அதற்கு தீர்வு காண முன்வரவில்லை. இதனால் வீழ்ச்சி நிலையில் சென்று கொண்டிருக்கும் பின்னலாடை தொழிலை காப்பாற்றி வேலை இழந்தவர்களுக்கு வேலை கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதிமான மழை பெய்து நொய்யலாற்றில் வெள்ளம் வந்தால் பொதுமக்களை பாதுகாப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். உலகத்திலேயே திருப்பூரில்தான் அதிக சாயக்கழிவை நீர்நிலைகளிலும், நிலத்தடி நீரிலும் கலந்து வருகின்றனர். இந்த நிலை நீடித்தால் திருப்பூர் இன்னும் சில ஆண்டுகளிலேயே மக்கள் வாழ தகுதியற்ற இடமாக மாறிவிடும். கழிவுநீரை சுத்திகரித்து மறுசுழற்சி முறையில் உபயோகப்படுத்த ஆலைகள் தயாராக வேண்டும். மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், சட்டத்தை எல்லாருக்கும் சமமாக செயல்படுத்த வேண்டும். ஒருசிலருக்கு சாதகமாகவும், சிலருக்கு பாதகமாகவும் செயல்படுத்துவதாலேயே இம்மாதிரியான நிகழ்வுகள் நடக்கிறது.
பாதுகாப்பான குடிநீர் கிடைக்காமல் இறப்பதில் இந்தியாவிலேயே கொங்குநாடு தான் முதலிடத்தில் இருக்க வாய்ப்பு உள்ளது. அதிக கழிவுநீர் நிலத்தடியிலே செலுத்தப்படுவதும் கொங்கு மண்டலத்தில்தான். பொதுமக்கள் இதற்கு எதிராக குரல் கொடுக்க முன்வரவேண்டும். சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேர் தகுதி இழப்பு வழக்கில் கோர்ட்டின் தீர்ப்பு மக்களை குழப்பம் அடைய செய்துள்ளது. 2 நீதிபதிகளும் சட்டத்தை வேறு வேறு கோணத்தில் பார்ப்பது ஆச்சரியமாக இருக்கிறது. தற்போது கோர்ட்டு தீர்ப்புக்கு காத்திருக்காமல் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவித்து கொண்டு 18 சட்டமன்ற தொகுதியிலும் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக தயாராக வேண்டும்.
மழை அதிகம் இருந்தால் காவிரி மேலாண்மை வாரியத்திற்கு வேலை இருக்காது என்ற கர்நாடக முதல்–மந்திரியின் பேச்சுக்கு கமலஹாசன் போன்றவர்கள் வரவேற்பு அளித்திருப்பது, சரியான புரிதல் இல்லாததே காரணம். அவினாசி–அத்திக்கடவு திட்டத்தை அரசு நிறைவேற்ற வேண்டும். நிதியை ஒதுக்குவது, அரசாணையை இயற்றியதுடன் நின்றுவிட்டது. பணிகள் ஆரம்பிக்கப்படவில்லை. ஆனைமலையாறு–நல்லாறு திட்டத்தையும் உடனடியாக நிறைவேற்ற வேண்டும். சேலம்–சென்னை பசுமை வழிச்சாலை திட்டம் விவசாயிகளிடம் கருத்துகளை கேட்டு அந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். கர்நாடகாவில் காவிரி தண்ணீரை பெற ஏராளமான போராட்டங்கள் நடைபெற்று வந்தது. ஆனால் தற்போது காவிரியில் இருந்து பெறப்படும் நதிநீரில் உபரி நீரை தமிழகத்தின் வறண்ட பல பகுதிகளுக்கும் கொண்டு செல்ல அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.