அவினாசி அருகே விபத்தில் பலியான தம்பதியின் உடல்களை வாங்க மறுத்து பொதுமக்கள் சாலை மறியல்
அவினாசி அருகே விபத்தில் தம்பதிகள் பலியாவதற்கு காரணமான போக்குவரத்து அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அரசு ஆஸ்பத்திரி முன்பு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவினாசி,
திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்த தெக்கலூர் ஆலாம்பாளையத்தை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 34), விசைத்தறி தொழிலாளி. இவருடைய மனைவி மல்லிகா (32). இவர்களுக்கு யோகசவுமியா (13), தேஜாஸ்ரீ (3) ஆகிய 2 மகள்கள் உள்ளனர்.
தம்பதி 2 பேரும் நேற்று முன்தினம் ஒரு மோட்டார் சைக்கிளில் தெக்கலூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை பழனிசாமி ஓட்டிச்சென்றார். பின்னால் அவரது மனைவி மல்லிகா அமர்ந்து இருந்தார்.
கோவை–சேலம் ஆறு வழிச்சாலையில் அவினாசி லிங்கம்பாளையம் அருகே மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தது. இவருக்கு முன்னால் மீன் லோடு ஏற்றிய லாரி ஒன்று அவினாசியில் இருந்து தெக்கலூர் நோக்கி சென்று கொண்டிருந்தது.
அப்போது அந்த பகுதியில் அவினாசி வட்டார போக்குவரத்து அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர் செந்தில்ராம் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அவர் அவ்வழியே வந்த மீன் லோடு ஏற்றிய லாரியை பார்த்ததும் அதை தடுத்து நிறுத்தி சோதனை செய்து கொண்டிருந்தார்.
அப்போது முன்னால் லாரி ஒன்று நின்றுகொண்டிருப்பதை பார்த்த பழனிசாமி மோட்டார் சைக்கிளின் வேகத்தை குறைத்து வலதுபுறத்தில் டிராக் வழியாக லாரிக்கு முன்னால் சென்றார். அப்போது கோவை நோக்கி வேகமாக சென்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரென்று பழனிசாமியின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
விபத்து நடந்தவுடன் வாகன சோதனையில் ஈடுபட்ட ஆய்வாளர் செந்தில்ராம் அங்கிருந்து ஓடி விட்டார். காரில் வந்தவர்களும் வேறு வாகனத்தில் ஏறி தப்பி விட்டனர்.
விபத்தில் பலத்த காயம் அடைந்த கணவன்–மனைவி இருவரும் அவினாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள் 2 பேரும் இறந்துவிட்டனர் என்று கூறினார்கள்.
இதையடுத்து விதிமுறைகளை மீறி மோட்டார் வாகன ஆய்வாளர் வாகனத்தை நிறுத்தி சோதனை நடத்தியதால்தான் 2 உயிர்கள் பலியாகி விட்டதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கோவை–சேலம் ஆறு வழிச்சாலையில் சாலை மறியல் செய்தனர். இதனால் நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார்கள். இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இந்த நிலையில் நேற்று காலை விபத்தில் பலியான பழனிசாமி–மல்லிகாவின் உடல்கள் அவினாசி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் 2 உடல்களையும் உறவினர்களிடம் ஒப்படைக்க முயன்ற போது உடல்களை வாங்க மறுத்து தலித் விடுதலை கட்சியினர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திரண்டு அவினாசி–சேவூர் சாலையில் சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள்.
அப்போது அவர்கள் விபத்துக்கு காரணமான மோட்டார் வாகன ஆய்வாளர் செந்தில்ராம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பெற்றோரை இழந்த 2 பெண் குழந்தைகளின் படிப்பு செலவு முழுவதையும் அரசே ஏற்கவேண்டும். மேலும் அந்த குழந்தைகளின் எதிர்கால பாதுகாப்பிற்கு ரூ.50 லட்சம் அரசு வழங்க வேண்டும் ஆகிய 3 கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் செய்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த தாசில்தார் வாணிலெட்சுமி ஜெகதாம்பாள், துணை போலீஸ் சூப்பிரண்டு பரமசாமி, இன்ஸ்பெக்டர்கள் லெட்சுமணன், சப்–இன்ஸ்பெக்டர்கள் செந்தில், கணேஷ், காமராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் 3 கோரிக்கைகளையும் நிறைவேற்றினால் மட்டுமே 2 பேரின் உடல்களையும் பெற்றுக்கொள்வோம் என்று கூறினார்கள்.
மேலும் சம்பவ இடத்திற்கு வந்து 3 கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதாக கலெக்டர் உறுதி கூறினால் மட்டுமே உடல்களை பெற்றுக்கொள்வோம் என்றும் கூறினார்கள். 40 நிமிடம் சாலை மறியல் செய்த அவர்கள் சாலை மறியலை கைவிட்டு அரசு ஆஸ்பத்திரி எதிரே சாலையோரம் அமர்ந்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் 40 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.